சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, 21, 22-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
23, 24-ம் தேதி ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.