போபால்: கடவுள், மதத்தின் பெயரால் பிராமணர்கள் பொதுமக்களை முட்டாளாக்குகின்றனர் என பேசிய மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் உமாபதியின் உறவினரும் பாஜகவின் ஓபிசி தலைவருமான பிரீத்தம் லோகி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாஜக பிராமணர்களின் கட்சி என கடுமையாக விமர்சிக்கப்பட்ட காலத்தில் அக்கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அடையாளமாக இருந்தவர் உமாபாரதி. பாபர் மசூதி இடிப்பு நிகழ்வில் உமாபாரதி மிக முக்கியப் பங்கு வகித்தவர். அண்மை காலமாக பாஜகவில் தீவிர நடவடிக்கைகளில் இருந்து உமாபாரதி ஒதுங்கி இருக்கிறார்.
உமாபாரதியின் உறவினரான பிரீத்தம் லோகி, ம.பி. பாஜக ஓபிசி பிரிவு தலைவராக உள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பிரீத்தம் லோகி பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. அதில், மத வழிபாடுகள், அர்ச்சனைகள் என்ர பெயரில் மக்களை பிராமணர்கள் முட்டாள்களாக்கி வருகின்றனர். மக்களிடம் இருந்து பணம் உள்ளிட்டவற்றை பறித்து வருகின்றனர் பிராமணர்கள். நல்ல குடும்பங்களைச் சேர்ந்த அழகான பெண்கள் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதல் வரிசையில் உட்கார வைத்துவிடுகின்றனர். அந்த பெண்களின் வீடுகளில் இருந்து உணவை பெற்றுக் கொள்கின்றனர். வயதான பெண்களை பின்வரிசைகளுக்கு தள்ளிவிடுகின்றனர் என கூறியிருந்தார் பிரீத்தம் லோகி.
அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரீத்தம் லோகிக்கு எதிரான ம.பி. மாநிலத்தின் பல மாவட்டங்களில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரீத்தம் லோகி தமது பேச்சுக்கு வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியும் இந்த பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டது.
இதனால் பாஜக மேலிடம், பிரீத்தம் லோகியை அக்கட்சியில் இருந்து நீக்கி உள்ளது. இது பிராமணர் அல்லாத சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக ம.பி. ஊடகங்கள் தெரிவித்துள்ளன.