சேலத்திற்கு ஆர்ப்பாட்டமாக வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி! மெளனம் கலையுமா?

சேலம்: அதிமுகவில் ஏற்பட்டுள்ள பெரும் பரபரப்புகளுக்கு இடையே, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்தடைந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அப்போது, கழகப் பொதுச் செயலாளர் அம்மாவின் அரசியல் வாரிசு எடப்பாடியார் என தொண்டர்கள் ஆவேசமாக முழக்கங்கள் எழுப்பினார்கள். எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அவர் வகித்து வந்த இடைக்கால பொதுச் செயலாளர் பதவியும் தானாகவே காலாவதியான நிலையில், சேலத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார்.

அதிமுக பொது குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்ததை எதிர்த்து பன்னீர் செல்வம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஓபிஎஸ்ஸின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பதவி ரத்து செய்யப்படுவதாகவும் உத்தரவிட்டார். இதனை வரவேற்று ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடும் நிலையில், இபிஎஸ் தரப்பு அமைதியாக அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறது.

சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சேலம் வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். அவரது வீட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கவுன்சிலர்கள் என அதிமுக நிர்வாகிகள் திரளாக காத்திருந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் அம்மாவின் அரசியல் வாரிசு என தொண்டர்கள் ஆவேசமாக கோஷம் எழுப்பிய தொண்டர்கள், எடப்பாடி பழனிச்சாமியை உற்சாகப்படுத்தினார்கள். தொடர்ந்து அனைவரிடமும் சால்வை மற்றும் மாலைகளை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி முக மலர்ச்சியுடன் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்

எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் முகாமிட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் தற்போது உற்சாகத்தில்  உள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் அடுத்தக் கட்ட நடவடிக்கை சேலத்தில் முடிவெடுக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் அளிக்கின்றன.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.