தென்காசி மாவட்டத்தில் ஆண் நண்பருடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைரவசாமி மற்றும் அவரது மனைவி முத்துமாரி ஆகியோர் வீரசிகாமணியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற இவர்கள் பணி முடிந்ததும் இரவில் வீடு திரும்பினர்.
நடுவக்குறிச்சி சமத்துவபுரத்தை கடந்து காட்டு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக காரில் வந்த மர்மநபர்கள் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.
பின்னர் அந்த கும்பல் கம்பு, கற்களால் வைரவசாமியை சரமாரியாக தாக்கி விட்டு, முத்துமாரி அணிந்திருந்த நகையை பறித்து சென்றது.
இதில் பலத்த காயமடைந்த வைரவசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அப்போது அந்த வழியாக வந்தவர்களிடம், முத்துமாரி தனது கணவரை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு தனது நகையை பறித்து சென்றதாக கூறி முதலை கண்ணீர் விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேர்ந்தமரம் போலீசார் முத்துமாரியிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின.
அப்போது முத்துமாரியே ஆண் நண்பருடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை திட்டமிட்டு தீர்த்துக் கட்டி விட்டு, நகைக்காக மர்மநபர்கள் கொலை செய்ததாக நாடகமாடியது அம்பலமானது.
மேலும் வைரவசாமியும், முத்துமாரியும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஆனால் திருமணத்துக்கு முன்பு முத்துமாரி இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், திருமணத்துக்கு பின்னரும் அந்த ஆண் நண்பருடன் முத்துமாரி பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
மனைவியின் முறையற்ற காதல் விவகாரத்தை அறிந்த வைரவசாமி கண்டித்ததால் ஆத்திரமடைந்த முத்துமாரி ஆண்நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து முத்துமாரியை கைது செய்த போலீசார் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவான முத்துமாரியின் ஆண்நண்பர் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.