‘ரூபாய் நோட்டுல வாழுறாரு காந்தி’… பாஜக அடுத்த ப்ளான்?

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் – சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” என்ற பெயரில் சுதந்திர தினத்தை கொண்டாட மத்திய பாஜக அரசு அழைப்பு விடுத்திருந்தது. மேலும், மத்திய பாஜக தலைமையிலான அரசு ஹர் கர் திரங்கா என்ற பரப்புரையையும் முன்னெடுத்தது. அதன் ஒருபகுதியாக, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்; சமூக வலைதளங்களிலும் மூவர்ணக் கொடியை முகப்பு புகைப்படமாக மாற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

அதன்படி, ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் பலரும் தேசியக் கொடியை முகப்பு படமாக வைத்தனர். நாடு முழுவதும் பெரும்பாலான வீடுகளில் கடந்த சில தினங்களாக தேசியக் கொடி பறந்தது. பறந்தும் வருகிறது. அதற்காக, தேசியக் கொடி குறியீடு சட்டத்தில் சில மாற்றங்களையும் பாஜக அரசு கொண்டு வந்தது.

1948 ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட நாதுராம் கோட்சேயால், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபின், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. அதேநேரத்தில், நாடு சுதந்திரம் பெற்றது முதல் மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக ஏற்கவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மறுத்து வருகிறது. பல்வேறு சமயங்களில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் இதனை எதிரொலித்துள்ளனர். அப்படி இருக்கையில், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை கொண்ட பாஜக அரசு தேசியக் கொடி தொடர்பான முன்னெடுப்பை செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

நாடு முழுவதும் காவிக் கொடியை பறக்க விடுவதில் முனைப்பு காட்டி வரும் பாஜக, அதற்காக தேசியக் கொடியை கையில் எடுத்துள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்; கைதட்ட வேண்டும் என்றெல்லாம் பிரதமர் மோடி கூறியபோது, அதன்பின்னால் அரசியல் இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, தனக்கிருக்கும் செல்வாக்கை காட்ட ஹர் கர் திரங்கா என்ற பரப்புரையை பாஜக அரசு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் எவர் ஒருவர் தேசியக் கொடியை வீடுகளில் பறக்கவிடவில்லையோ, சமூக வலைதள முகப்பு படத்தில் வைக்கவில்லையோ, அவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் என்பது போன்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் கூட மறைந்த முன்னாள் பிரதமர் நேரு கையில் பிடித்திருக்கும் தேசியக் கொடியை புகைப்படமாக வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், பாஜகவுக்கு ஆதரவான எண்ணவோட்டத்தை கொண்டிருப்பவர்களையும் எளிதாக அடையாளம் காண முடிந்தது.

சுதந்திர தினத்தயொட்டி மத்திய பாஜக அரசு மேற்கொண்ட ஹர் கர் திரங்கா எனும் பரப்புரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து. அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இதுபோன்ற சில திட்டங்களையும் பாஜக அரசு முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹர் கர் திரங்கா பரப்புரையின் ஒருபகுதியாக, சுதந்திர தினத்தன்று பல்வேறு போட்டிகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி மக்களோடு மக்களாக பாஜக நின்றது. இவை அக்கட்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜகவினர் உற்சாகமாக உள்ளனர். அதே உற்சாகத்துடன் காந்தி ஜெயந்திக்கான ஏற்பாடுகளையும் பாஜக மேலிடம் செய்து வருவதாக கூறுகிறார்கள்.

பாஜகவை பொறுத்தவரை அவர்கள் தேசியக் கொடியை எப்போதும் உயர்த்திப் பிடித்ததில்லை. அதேபோல், பிரிட்டிஷாருடன் நெருக்கமாக இருந்தார்கள் என்று குற்றம் சாட்டப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்தவர்கள் எப்போதும் மகாத்மா காந்தியை கொண்டாடியதில்லை.

மகாத்மா காந்தி படுகொலையின் 71ஆவது ஆண்டை தேசம் அணுசரித்தபோது, அகில பாரதிய இந்து மகாசபையின் தேசியச் செயலாளர் புஜா ஷகூன் பாண்டே, காந்தி உருவ பொம்மையைத் துப்பாக்கியால் சுட்டார். அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி, காந்தியை கொன்றவரான இந்து மகாசபை உறுப்பினர் நாதுராம் கோட்சேவுக்கு மாலை அணிவித்தனர். அந்த நிகழ்வின்போது, பூஜா பாண்டேவுடன் உமா பாரதி, மற்றும் சிவ்ராஜ் சவுகான் ஆகியோர் இருந்ததை பார்க்க முடிந்தது. 2014 டிசம்பரில், பாஜக எம்.எல்.ஏ. சாக்‌ஷி மகராஜ், கோட்சேவை தேசப்பற்று மிக்கவர் எனக் கூறிப் பின்னர் அக்கருத்தில் இருந்து பின்வாங்கினார்.

துரதிருஷ்டவசமாக, பாஜக தலைவர்கள் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் இதுபோன்ற பல சம்பவங்களையும் கண்டிதத்தில்லை. இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை பாஜகவின் அங்கம் இல்லை என்றாலும்கூட, அவர்களது கருத்துகள் இந்துத்துவக் குழுக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அவை பாஜகவின் அரசியல் நோக்கத்திற்கு உதவியாக இருக்கின்றன. எப்போதுமே, சர்தார் வல்லபாய் படேலை கையில் எடுக்கும் பாஜக இந்த முறை ஏன் காந்தியை நோக்கி செல்கிறது என்ற கேள்வி எழலாம். ஏனெனில், மகாத்மா காந்தி நாடு முழுவதும் உள்ள மக்கள் மனதில் சென்றடைந்துள்ளார். ரூபாய் நோட்டுகளில் சிரித்துக் கொண்டு அனைவரது பாக்கெட்டுகளிலும் இருக்கிறார். உதாரணமாக, தமிழகத்தில் வல்லப்பாய் படேல் கொண்டாடப்படாமல் இருக்கலாம்; ஆனால், மகாத்மா காந்தி கொண்டாடப்படாமல் இருந்ததில்லை. இந்த அரசியல் பாஜகவுக்கு தேவைப்படுகிறது. அதனால்தான், தேசியக் கொடிக்கு அடுத்ததாக காந்தியை அவர்கள் கையில் எடுக்கிறார்கள் என்கிறனர் அரசியல் நோக்கர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.