சோயா சங்க்ஸ் குருமா
தேவையானவை:
சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) – அரை கப்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கிராம்பு – ஒன்று
பட்டை – சிறிய துண்டு
கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) – 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள:
பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – கால் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)
பச்சை மிளகாய் – 2
பாதாம், முந்திரி – தலா 5
கசகசா – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ளவற்றில் பாதாம், முந்திரி, கசகசாவை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். அவற்றுடன் மற்ற பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். சோயா உருண்டைகளை வெந்நீரில் சில நிமிடங்கள் போட்டு எடுத்து, ஒட்டப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து, தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் சிறிதளவு தண்ணீர்விட்டு சோயா சங்க்ஸையும் போட்டு காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு, கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை நிறுத்தவும். சுவையான குருமா சில நிமிடங் களில் தயார்.
பிரெட் மூங்தால் மசாலா டோஸ்ட்
தேவையானவை:
பிரெட் துண்டுகள் – 6
நெய் – சிறிதளவு
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
அரைத்துக்கொள்ள
பாசிப்பருப்பு – அரை கப்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – கால் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)
காய்ந்த மிளகாய் – 2
மல்லி (தனியா) – அரை டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
சட்னி செய்ய:
கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) – கால் கப்
புதினா (அலசி ஆய்ந்தது) – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவும். அதனுடன் அரைக்கக்கொடுத்துள்ள மற்ற பொருள்களைச் சேர்த்து மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். கொத்தமல்லித்தழை புதினாவை, உப்பு சேர்த்து சட்னியாக அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் மிதமான தீயில் தோசைக்கல்லை வைத்து நெய்விட்டு சூடானதும், பிரெட் துண்டில் ஒருபக்கம் வெண்ணெய் தடவி அதன் மீது சட்னி தடவவும், மற்றொரு பிரெட் துண்டில் ஒருபுறம் வெண்ணெய் தடவி அதன் மீது பாசிப்பருப்பு மசாலாவைத் தடவி இரு பிரெட் துண்டுகளையும் மூடி சூடான தோசைக்கல்லில் இருபுறமும் சுட்டு (டோஸ்ட் செய்து) எடுக்கவும் அல்லது பிரெட் டோஸ்டரில் டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி சாஸ் அல்லது மயோனைஸ் உடன் சாப்பிடவும்.
இலந்தை வற்றல் குழம்பு
தேவையானவை:
இலந்தை வற்றல் (இலந்தை வடை) – 50 கிராம்
நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
கத்திரிக்காய் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்)
பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) – சிறிதளவு
ஓமம் பொடி- ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உடைத்த உளுந்து – தலா ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
ஓமம் பொடி செய்ய:
ஓமம் – 50 கிராம்
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
சுக்குப்பொடி – அரை டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
உளுத்தம்பருப்பு – 50 கிராம்
செய்முறை:
அடுப்பில் வாணலியை மிதமான தீயில் வைத்து ஓமம் பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றில் உப்பு தவிர அனைத்தையும் வறுத்து எடுத்து மிக்ஸியில் அரைத்து, பிறகு உப்பு சேர்த்து அரைத்தெடுத்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தவும்.
ஒன்றரை கப் வெந்நீரில் இலந்தை வற்றலைச் சிறிது நேரம் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு சூடானதும் கடுகு தாளித்து, உளுந்து, கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூளும் சேர்த்து தாளிக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கத்திரிக்காய் சேர்த்து வதக்கி, கறிவேப்பிலை, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதில் இலந்தைக் கரைசலை ஊற்றி உப்பு, சாம்பார் பொடி, ஒரு டீஸ்பூன் ஓமம் பொடி சேர்த்துக் கொதிக்கவிட்டு வெல்லம், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
குறிப்பு: இலந்தை வடை ரெடிமேடாகக் கிடைக்கும் அல்லது நாமே தயார் செய்யலாம். 100 கிராம் இலந்தை பழத்துடன், சிறிதளவு புளி, 2 டேபிள்ஸ்பூன் துருவிய வெல்லம், 6 காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு இடித்து வடையாகத் தட்டி வெயிலில் நான்கைந்து நாள்கள் காயவைத்து எடுத்தால் இலந்தை வற்றல் (வடை) தயார்.
பீர்க்கங்காய் பஜ்ஜி
தேவையானவை:
பீர்க்கங்காய் – ஒன்று
கடலை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – கால் கப்
கொத்தமல்லித்தழை விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
பீர்க்கங்காயின் தலை, வால் பகுதிகளை வெட்டி எடுத்துவிட்டு மேலோட்டமாக வெளித்தோலை சீவிக்கொள்ளவும். சிறு வட்ட வட்டமாகவோ, நீளமாகவோ காயை நறுக்கிக் கொள்ளவும்.
அகன்ற பவுலில் எண்ணெய் தவிர மற்ற பொருள்களைப் போட்டு, நீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். நறுக்கிய பீர்க்கங்காயை மாவில் முக்கியெடுத்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து, தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.