புதுடெல்லி: வங்கிகளை தனியார்மயமாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்த அறிக்கையை நிராகரிக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைப்பது, தனியார் மயமாக்குவது என ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே, 27 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை தற்போது 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பல வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை தொடர்கிறது. இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளை அதிகளவில் விரைவாக தனியார் மயமாக்குவது பேரழிவை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி இதழில் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில், படிப்படியாக தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை வரவேற்றிருந்தது.
இந்த ஆய்வு அறிக்கை மூலம் வங்கிகள் தனியார்மயத்தை ரிசர்வ் வங்கி எதிர்ப்பதாக தகவல்கள் பரவின. இதை மறுத்த ரிசர்வ் வங்கி, ஆய்வுக் கட்டுரை தனது கருத்தல்ல என்று விளக்கம் அளித்தது. இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரினேட் நேற்று அளித்த பேட்டியில்,‘‘இந்த ஆய்வறிக்கையை நிராகரிக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசால் அழுத்தம் தரப்பட்டுள்ளது. இதுபோல், ரிசர்வ் வங்கி நிர்பந்திக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும் ரிசர்வ் வங்கி எதிர்த்தது. எனவே, வங்கிகள் தனியார் மயம் தொடர்பாக ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,’’என்றார்.