பெங்களூரு: கர்நாட காங்கிரஸ் எம்எல்சி ஹரிபிரசாத் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவில் நிறைய பேர் முதல்வராக ஆசைப்படுகிறார்கள். அரசியலில் இருந்து விலகி இருந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு பாஜக ஆட்சி மன்ற குழுவில் இடமளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் ஆகிய இரண்டிலும் எடியூரப்பா முக்கிய பங்கு வகிப்பார் என்பது உறுதியாகிவிட்டது.
எனவே அவரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட வாய்ப்பு இருக்கிறது. பாஜகவை பொறுத்தவரை பணம் கொடுத்தால் மட்டுமே பதவி கொடுப்பார்கள். முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பாஜக தலைவர்கள் சிலரே பகிரங்கமாக கூறியுள்ளனர். அதனால் பசவராஜ் பொம்மையின் பதவி நிரந்தரம் இல்லை. இவ்வாறு ஹரிபிரசாத் தெரிவித்தார்.
இதற்கு கர்நாடக அமைச்சர்கள் அஷ்வத் நாராயண், பிரபு சவுஹான், ஆர்.அசோக் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அஷ்வத் நாராயண் கூறுகையில், ‘‘உண்மைக்கு மாறான கருத்தை தெரிவித்த காங்கிரஸ் எம்எல்சி ஹரிபிரசாத்தை வன்மையாக கண்டிக்கிறேன். பாஜகவில் உண்மைக்கும் விசுவாசத்துக்கும் மட்டுமே மதிப்பு தரப்படுகிறது. காங்கிரஸில் தான் பணம் கொடுத்து பதவி வாங்க முடியும். பசவராஜ் பொம்மை முதல்வர் பதவியில் நீடிப்பார் என மேலிடத் தலைவர் அருண் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனவே அவரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. பசவராஜ் பொம்மை தலைமையில்தான் பாஜக தேர்தலை சந்திக்கும்’’ என்றார்.
கடந்த மே மாதத்தில் பாஜக மூத்த எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால், ”ரூ. 2500 கோடி கொடுத்தால் முதல்வர் பதவி தருவதாக டெல்லி மேலிடத் தலைவர்கள் என்னிடம் பேரம் பேசினார்கள்” என குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.