தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனனின் ஒரு நபர் விசாரணை ஆணையம், கடந்த 3 ஆண்டுகளில் 36 கட்டங்களாக விசாரணை நடத்தியது. இதில், 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 1,048 பேர் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 1,544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது. 3,000 பக்கங்களுக்கும் மேற்பட்ட இதன் முழுமையான விசாரணை அறிக்கை, கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒருநபர் விசாரணை ஆணைத்தின் விசாரணை அறிக்கை கடந்த 18-ம் தேதி கசிந்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த அறிக்கையில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அப்போதைய ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகள் என 17 பேருமே முழுப் பொறுப்பு. துப்பாக்கிச்சூடு நடத்திட முறையான அனுமதியோ, வரைமுறையோ பின்பற்றப்படவில்லை. பொதுமக்கள் குருவிகளைப் போல சுடப்பட்டுள்ளனர்.
சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டிற்கு முந்தைய எச்சரிக்கை நடவடிக்கைகளான கண்ணீர்ப்புகை, லத்தி சார்ஜ், காற்றில் எச்சரிக்கும் துப்பாக்கிச்சூடு என எதுவும் பின்பற்றப்படவில்லை” என்பது உள்ளிட்ட பல காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளி வந்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஒருநபர் விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கையையும் அரசு வெளியிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையில், ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டமன்றத்தில் வைக்கப்படும் என மாநில சட்டத்துறையின் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் கடந்த 22.05.2018-ம் அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும் தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் கடந்த 23.05.2018 அன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தன்னுடைய இடைக்கால அறிக்கையை கடந்த 14.05.2021 அன்று அரசுக்கு அளித்தது.
அந்த அறிக்கையின் பரிந்துரையின்படி பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை திரும்பப்பெறவும், போராட்டத்தின் போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கிடவும், போராட்டத்தில் ஈடுபட்டு பாளையங்கோட்டை சிறையில் 30.05.2018 அன்று இறந்த, பிணையில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதி பரத்ராஜின் தாயாருக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகையும், திரும்பபெற தகுதியுள்ள 38 வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்கள்ளின் உயர்கல்வி, வேலைவாய்ப்பினைத் தொடர தடையில்லாச்சான்று வழங்கிடவும் கடந்த 26.05.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைகளின் மீது அரசு அவ்வப்ப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. மேற்படி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை 18.05.2022 அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை நான்கு தொகுதிகளாக தொகுக்கப்பட்டதால் அதை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு அவை சட்ட ஆலோசகர்களின் பரிசீலனையில் உள்ளது. சம்மந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்த பின், நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.