மலப்புரம்: கேரளாவில் அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியதில் அதில் இருந்த தம்பதியர் பல அடி உயரம் பறந்து விழுந்தனர். இதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர் (40). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் தனது மனைவி ஆஷாவை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். குத்திப்புரம் பகுதி அருகே சென்ற போது எதிரே அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று இவர்களின் ஸ்கூட்டரின் மீது அதிவேகத்தில் மோதியது. கார் மோதியதும் ஸ்கூட்டரில் இருந்த கணவனும், மனைவியும் ஆளுக்கொரு திசையில் அந்தரத்தில் பல அடி உயரத்துக்கு பறந்து கீழே விழுந்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே அப்துல் காதர் உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆஷாவை அங்கிருந்தவர்கள் கோட்டைக்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகின. அதில் அப்துல் காதர் ஸ்கூட்டரை சரியாக ஓட்டிச் செல்வதும், வேகமாக வந்த கார் தான், சரியான பாதையில் இருந்து விலகி ஸ்கூட்டரின் மீது மோதுவதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த காரின் உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர். கார் மோதி தம்பதியர் பல அடி உயரம் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தியா முதலிடம்
உலகிலேயே சாலை விபத்துகள் அதிக நிகழும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டொன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் இந்தியாவில் நிகழ்கின்றன. இந்த விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளிலும் உலக அளவில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது. சாலை விபத்துகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைக்க ஸ்பீட் பிரேக்கர், வளைவுகளை சுட்டிக்காட்டும் ஒளிரும் பலகைகள், சாலையில் மோட்டார் சைக்கிள், கார் செல்லும் பாதையை பிரித்துக் காட்ட ஒளிரும் கற்கள் என அரசாங்கமும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றன.
ஆனாலும் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. சாலை விதிகளை பின்பற்றாமல் இருத்தல்; அதிவேகமாக வாகனங்களை இயக்குதல் போன்றவையே சாலை விபத்துகள் நிகழ முக்கிய காரணம் என போக்குவரத்து போலீஸார் தெரிவிக்கின்றனர். அதேபோல, சாலை விபத்துகளில் உயிரிழக்கும் 10-இல் 8 பேர் சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை இயக்கியவர்கள் தான் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.