UK, Gulf countries and Egypt among 7 locations on IIT expansion list: ஐ.ஐ.டி.,களின் உலகளாவிய விரிவாக்கத்திற்கான மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் கலந்தாலோசித்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, சவுதி அரேபியா, கத்தார், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை “இந்தியன் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி” பிராண்ட் பெயரின் கீழ் வெளிநாட்டு வளாகங்களுக்கு வருங்கால இடங்களாக அடையாளம் கண்டுள்ளது என்பதை தி சண்டே எக்ஸ்பிரஸ் அறிந்துக் கொண்டது.
ஐ.ஐ.டி கவுன்சில் நிலைக்குழுத் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான 17 பேர் கொண்ட குழு, கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, இந்த ஏழு நாடுகளும் பல முக்கிய அளவுருக்களில் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளன.
இதையும் படியுங்கள்: TNEA கவுன்சலிங்; கேம்பஸ் இண்டர்வியூ-வில் அசத்தும் அரசு பொறியியல் கல்லூரிகள் இவைதான்!
அளவுருக்களில் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு நிலை, கல்விப் பாரம்பரியம், தரமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஈர்க்கும் உகந்த சுற்றுச்சூழல் அமைப்பு, ஒழுங்குமுறை ஏற்பாடுகள் மற்றும் இந்தியாவின் “பிராண்டிங் மற்றும் உறவை” மேம்படுத்துவதற்கான சாத்தியமான நன்மைகள் ஆகியவை அடங்கும்.
இந்த அறிக்கையானது 26 இந்திய தூதரகங்களின் தலைவர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டது, வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார இராஜதந்திரப் பிரிவு பிப்ரவரி 2 மற்றும் மார்ச் 28 ஆகிய தேதிகளில் குழுவிற்கும் தூதரக அதிகாரிகளுக்கும் இடையே இரண்டு மெய்நிகர் அமர்வுகளை ஏற்பாடு செய்ததன் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் பகிர்ந்துள்ள தகவல்களின்படி, “பர்மிங்காம் பல்கலைக்கழகம், கிங்ஸ் கல்லூரி லண்டன், எக்ஸிடெர் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றிலிருந்து ஆறு உறுதியான ஒத்துழைப்பு திட்டங்களை தூதரகம் பெற்றுள்ளது”.
“பல்கலைக்கழகங்களுக்கும் ஐ.ஐ.டி குழுவிற்கும் இடையே ஒரு சந்திப்புக்கு எங்கள் தூதரகம் பல கோரிக்கைகளை வைத்துள்ளது. இந்த முன்மொழிவை முன்னெடுப்பதற்கு விரிவான கருத்துக் குறிப்பு மற்றும் நோடல் தொடர்புப் புள்ளியை அது மேலும் கோரியுள்ளது,” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மதிப்பாய்வு செய்த அறிக்கை கூறியது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஐ.ஐ.டி-டெல்லி விருப்பமான தேர்வாக இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது. அறிக்கையின்படி, எகிப்து 2022-23 முதல் கற்பித்தலை நேரடியாக இல்லாவிட்டாலும், ஆன்லைனில் தொடங்க ஆர்வமாக உள்ளது. ஆனால், அவசரப்பட வேண்டாம் என்று குழு அறிவுறுத்தியுள்ளது, சரியான ஆலோசனைக்குப் பிறகு நேரடி கற்பித்தல் வளாகங்களை மட்டுமே திறக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
“புதிய நிறுவனங்களை நிறுவும் போது, உள்ளூர் அரசாங்கத்திடம் இருந்து வளாகத்திற்கான ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. வெளிநாடுகளில் நாட்டின் நற்பெயரைக் கட்டியெழுப்புவதற்காகவே, கல்வி நிறுவனங்கள் நிறுவப்படுகின்றன, வர்த்தகத்திற்காக அல்ல. எனவே, இந்த நிறுவனங்கள் உள்ளூர் மாணவர்களை (அது புலம்பெயர்ந்த இந்தியர்களாக இருக்கலாம்) ஈர்க்க வேண்டும். இந்த நிறுவனங்களில் இந்திய மாணவர்களின் சதவீதம் 20% க்கும் குறைவாக இருக்க வேண்டும்” என்று அறிக்கை கூறுகிறது.
ஐ.ஐ.டி.,கள் வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்துவது புதியதல்ல. உதாரணமாக, ஐ.ஐ.டி டெல்லி ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் கல்வி மற்றும் அறிவுத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, அதே நேரத்தில் ஐ.ஐ.டி சென்னை இலங்கை, நேபாளம் மற்றும் தான்சானியாவில் விருப்பங்களை ஆராய்ந்து வருகிறது.
இதுவரை, விவாதங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட ஐ.ஐ.டி.,களைப் பற்றியது. இந்தக் குழு, முதல் முறையாக, உள்நாட்டு ஐ.ஐ.டி.,களை வழிகாட்டிகளாகக் கொண்டு இந்திய இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற பிராண்ட் பெயரில் நிறுவனங்களின் சங்கிலியை அமைக்கும் மாதிரியை முன்மொழிந்துள்ளது.
குழுவின் உறுப்பினர்களில் ஐ.ஐ.டி டெல்லி, சென்னை, காரக்பூர் ஆகியவற்றின் இயக்குநர்கள்; ISM தன்பாத், குவஹாத்தி, கான்பூர்; இந்திய அறிவியல் நிறுவனம்; என்.ஐ.டி சூரத்கல்; மற்றும் JNU, டெல்லி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள்; மற்றும், டீன் (சர்வதேச உறவுகள்) ஐஐடி பாம்பே ஆகியோர் அடங்குவர்.
“புதிய கல்வி நிறுவனங்களை ‘இந்தியன் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (நாட்டின் பெயர்)’ என்று அழைக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட பெயர் ஐ.ஐ.டி.,க்கு நெருக்கமாக உள்ளது, மேலும் நிறுவனம் இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ளது என்பதை வலியுறுத்த/தெளிவுபடுத்த சர்வதேசம் (இன்டர்நேஷனல்) சேர்க்கப்பட்டுள்ளது. பெயரில் உள்ள வித்தியாசம் (போதுமான ஒற்றுமையுடன்) புதிதாக நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்கள், தற்போதுள்ள ஐ.ஐ.டி.,களின் வலிமையைப் பயன்படுத்தி, தங்கள் சொந்த அடையாளத்தையும் நெறிமுறைகளையும் உருவாக்க அனுமதிக்கும்,” என்று அறிக்கை கூறியது.
எவ்வாறாயினும், இந்த திட்டம் வெற்றிபெற மற்றும் வழிகாட்டி நிறுவனங்களுக்கு சுமையாக மாறாமல் இருக்க, “நிறுவப்படும் நாடு அல்லது இந்திய அரசாங்கத்தின் கணிசமான முதலீடு” தேவைப்படும் என்று அறிக்கை கூறுகிறது. “உண்மையில் இந்தியாவில் ஸ்பான்சர் செய்யும் நிறுவனம், அத்தகைய வளாகத்திலிருந்து ஒரு நியாயமான அளவு ராயல்டியை (வெளிநாட்டு வளாகத்தின் ஒட்டுமொத்த செலவில் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம்) எதிர்பார்க்க வேண்டும்” என்று குழு அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும், வெளிநாட்டு வளாகம் நிறுவப்படும் நாட்டின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும், இது உள்ளூர் சட்டங்களால் வழங்கப்படாவிட்டால் மாணவர்கள் அல்லது ஊழியர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்காது என்பதைக் குறிக்கிறது. “இந்த நிறுவனங்கள் உருவாக்கப்படும் நாடாளுமன்றச் சட்டம், தற்போதைய ஐ.ஐ.டி.,களைக் காட்டிலும் அதிக சுதந்திரத்தை அளிக்க வேண்டும்” என்று குழு அறிக்கையில் கூறியுள்ளது.
குழுவின் அறிக்கையில், பூட்டான், நேபாளம், பஹ்ரைன், ஜப்பான், தான்சானியா, இலங்கை, வியட்நாம், செர்பியா, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அடையாளம் காணப்பட்ட ஏழு நாடுகளுக்குக் கீழே தரவரிசையில் உள்ளன. இந்திய அதிகாரிகள் இந்த நாடுகளிலும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று குழு கூறியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil