ஜெய்பூர்: பசு வதை செய்ததற்காக 5 பேரை நாங்கள் கொலை செய்து இருக்கிறோம் என்று ராஜஸ்தான் மாநில பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ஞான் தேவ் அஹுஜா பேசியுள்ள நிலையில், இது பாஜகவின் மத பயங்கரவாதம் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.
ராஜஸ்தானில் முந்தைய வசுந்தர ராஜே சிந்தியா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சிகாலத்தில் ராம்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் ஞான் தேவ் அஹுஜா. அந்த பகுதியில் கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பசுக்களை கடத்திச் சென்றதாக கூறி ரக்பர் கான் (வயது 28) மற்றும் பெஹ்லு கான் (வயது 55) ஆகிய இருவர் இந்துத்துவா அமைப்பினரால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவங்களை தாங்கள்தான் செய்ததாக தற்போது பேசி இருக்கிறார் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ஞான் தேவ் அஹுஜா. இவர்களுடன் மேலும் 3 பேரை பசு வதைக்காக தாங்கள் கொலை செய்து இருப்பதாக அவர் பேசி இருப்பது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொலை செய்யுங்கள்
இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் ஞான் தேவ் அஹுஜா பேசுகையில், “கொலை செய்வதற்கு என்னுடைய தொண்டர்களுக்கு அனுமதி வழங்கிவிட்டேன். பின்னர் அவர்களை விடுவிக்க ஜாமீன் பெற்றோம். பசுவதையில் யார் ஈடுபட்டாலும் கொலை செய்யுங்கள்” என்றார். கடந்த வாரம் ஞான் தேவ் அஹுஜா பேசிய இந்த வீடியோ வெளியாகி ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
6 பேர் விடுவிப்பு
ஞான் தேவ் அஹுஜா கூறியதைபோல் பெஹ்லு கானை கொலை செய்த 6 பேரும் கடந்த 2019 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து ராஜஸ்தான் மாநில அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. ரக்பர் கான் கொலை வழக்கு இன்னும் கீழ் நீதிமன்றத்திலேயே விசாரணையில் இருந்து வருகிறது.
வழக்குப்பதிவு
வீடியோ வெளியானதை தொடர்ந்து ஞான் தேவ் அஹுஜா சமூக ஒற்றுமையை குலைக்கும் விதத்தில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஞான் தேவ் அஹுஜா இதற்கு முன்பும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தவர். கொலைகாரர்கள் உண்மையான தேச பக்தர்கள் என்றும் சத்ரபதி சிவாஜி மற்றும் குரு கோவிந்த் சிங் ஆகியோரின் உண்மையான வழிதோன்றல்கள் என்றும் அவர் கூறி இருந்தார்.
விளக்கம்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆல்வார் தெற்கு பாஜக தலைவர் சஞ்சய் சிங் நருகா, “இது அஹுஜாவின் சொந்த கருத்து. கட்சிக்கு இதுபோன்ற சிந்தனை இல்லை.” என்றார். இதுபற்றி அஹுஜா அளித்து விளக்கத்தில், “பசு வதையில் ஈடுபடுபவர்கள் தப்பிக்க முடியாது. பசுக்களை கடத்திய இஸ்லாமியர்களை எங்கள் தொண்டர்கள் தாக்கியதாகவே நான் பேசினேன்.” என்றார்.
காங்கிரஸ் கண்டனம்
ஞான் தேவ் அஹுஜாவின் வீடியோ வெளியானதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கோவிந்த் சிங் டோடாஸ்ரா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். “பாரதிய ஜனதா கட்சியின் மத பயங்கரவாதம் மற்றும் மதவெறிக்கும் இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். பாஜகவின் உண்மையான முகம் அம்பலப்பட்டுவிட்டது.” என்றார்.