மும்பை: மும்பை காவல் துறையின் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு நேற்று முன்தினம் இரவு வாட்ஸ் அப்மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. அதில், மும்பையில் 26/11 பாணியில் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல் துறை நேற்று தெரிவித்தது.
பாகிஸ்தான் செல்போன் எண்ணிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அந்த தகவலின் ‘ஸ்க்ரீன்ஷாட்’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 6 பேர் இந்த தாக்குதலை நடத்துவார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் கடந்த ஜூன் மாதம் தையல்காரரை தலை துண்டித்து கொலை செய்ததைப் போன்ற சம்பவங்களும் நிகழும் என அந்த வாட்ஸ் அப் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதர பாதுகாப்புப்படை அமைப்புகளுக்கும் இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை காவல் ஆணையர் விவேக் பான்சாக்கர் கூறும்போது, “பாகிஸ்தான் செல்போன் எண், 28 மொஹலா அஜிஸ்காலனி, வெண்டலா சாலை, ஷாத்ரா, லாகூர் என்ற முகவரியில் வசிக்கும் முகமது இம்தியாசுக்கு சொந்தமானது. இந்த தகவலையடுத்து கடற்கரை பகுதியில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
இதுகுறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, “மும்பையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டல் தகவலை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
மும்பையிலிருந்து 190 கி.மீ. தொலைவில், ராய்கட் நகரின் ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் சேதமடைந்த படகு ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கரை ஒதுங்கியது. அதில் இருந்து 3 ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட சில ஆயுதங்கள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஐரோப்பாவுக்கு சென்று கொண்டிருந்த இந்த படகு, இன்ஜின் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 26-ம் தேதி சேதமடைந்ததாகவும், அந்த படகு சமீபத்தில் கரை ஒதுங்கியதாகவும் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருந்தார்.
மேலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹனா லாண்டர்கன் என்பவருக்கு சொந்தமான இந்த படகில் இருந்தவர்கள் ஏற்கெனவே மீட்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
எனினும், இதுகுறித்து தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் மும்பையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி (26/11) பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பேர் படகு மூலம் மும்பை நகருக்குள் நுழைந்தனர். அவர்கள் சத்ரபதி சிவாஜி ரயில்முனையம் மற்றும் தாஜ் நட்சத்திர ஓட்டலில் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர், போலீஸ் அதிகாரிகள் உட்பட 175 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.