சென்னை: தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் புலமை பெறாத வெளிமாநிலத்தவர் இனி தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேருவது தடுக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் நடந்த போது, அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவர் பங்கேற்றனர். தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படாது தான் இதற்கு காரணம் என்று பாமக கூறியிருந்தது. அந்தத் தவறு இப்போது சரி செய்யப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.
தமிழக அரசு பணிகளில் வெளிமாநிலத்தவர் சேருவதை தடுக்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களிலும் 80% பணிகள் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இது தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் தனியார் வேலைகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்ய அரசு சட்டம் இயற்ற வேண்டும்.” என்று தெரிவித்தார்.