நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியில் வசித்து வரும் நல்லமுத்து மகேஷ்வரி தம்பதியரின் மூத்த மகன் ரெனொ. அருகில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 10 -ம் வகுப்பு படித்து வருகிறார். அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட ரெனொவை மேட்டுப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் ரெனொவிற்கு சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். நான்கு நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த ரெனொ குணமடைந்து வீடு திரும்புகையில் மருத்துவரை கோட்டோவியமாக வரைந்து பரிசளித்திருக்கிறார். இதை சற்றும் எதிர்பாராத மருத்துவர் நெகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்.
இதுகுறித்து தெரிவித்த குழந்தைகள் நல மருத்துவர் மகேஷ்வரன், ” மருத்துவமனையின் மேல் தளத்தில் நூலகம் ஒன்றையும் நடத்தி வருகிறேன். சிகிச்சை வரும் சிறுவர் சிறுமிகள் வாசிக்கும் வகையில் குழந்தைகளுக்கான புத்தகங்களை கொடுப்பது வழக்கம். ரெனொவிற்கு 10 புத்தகங்களை வாசிக்கக் கொடுத்தேன். சிகிச்சையில் இருந்த 4 நாளில் 6 புத்தகங்களை வாசித்து முடித்திருக்கிறார். என்னை ஓவியமாக வரைந்து என் கையிலேயே கொடுத்து நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டார். ஒரு மருத்துவராக மிகவும் மகிழ்ச்சி அடைந்த ஒரு தருணமாக இதை கருதுகிறேன்” என்றார்.
இது குறித்து மாணவன் ரெனொவை தொடர்பு கொண்டு பேசினோம், ” எனக்கு மியூசிக் ரொம்ப பிடிக்கும். மியூசிக் கத்துக்கிட்டு இருக்கேன். அதே மாதிரி ஓவியம் வரையவும் பிடிக்கும். காய்ச்சல் வந்து ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப டாக்டரை வரையணும்னு தோனுச்சி. பென்சில்ல வரைஞ்சேன். முதல் முறையா கோட்டோவியமா இவரோட முகத்தை தான் வரஞ்சிருக்கேன். இந்த டாக்டரை ரொம்பப் பிடிக்கும். கவர்ன்மென்ட் ஸ்கூல் பசங்க படிப்புக்கும் நிறைய உதவி செஞ்சிட்டு இருக்கார்” என்றார்.