கீழக்கரை பகுதியில் நிலத்தடி நீருக்கு வேட்டு வைக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கீழக்கரை: கீழக்கரை தாலுகாவில் மழை நீரை பாதுகாக்க சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதுடன் பலன் தரும் மரக்கன்றுகளை நடுவதற்கு உள்ளாட்சி அமைப்புகள் முன் வரவேண்டும். இதன் மூலம் அடுத்த 3 மாதங்களுக்கு தண்ணீர் எதிர்பார்ப்பின்றி மரங்கள் வளர்ந்து சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா கண்டங்கள் உட்பட 129 நாடுகளில் சீமை கருவேல மரங்கள் உள்ளது. 1870ல் சமையலுக்கான எரி பொருளாகவும் பயிர்களுக்கு வேலிகளாகவும் முதன் முதலில் இந்தியாவில் அறிமுகமானது. அடுத்த 20 ஆண்டுகளில் வேகமாக ஆந்திரா,டெல்லி ஹரியானா,பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பரவியது. காலப்போக்கில் எரிபொருள் பயன்பாடு மிகவும் குறைந்த சூழலில் எளிதில் பரவி வளரும் தன்மை கொண்ட இத்தாவரம் விளை நிலங்களிலும், பராமரிக்காமல் விடப்பட்ட நீர்நிலைகளிலும், பொது இடங்களிலும் செழித்து வளர்ந்துள்ளன.

நிலத்தின் ஆழத்தில் ஊடுருவி சென்று ஏனைய தாவரங்களுக்கு நீர் கிடைக்க விடாமல் அதன் வளர்ச்சியை தடுக்கிறது. மழை இல்லாத சூழலில் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் வெப்பம் அதிகரிக்கிறது. மழை வாய்ப்பினையும் குறைத்து விடுகிறது. இதன் ஆணிவேர் மட்டுமின்றி பக்க வேர்களும் வலிமையானவை. மழைநீர் ஊடுருவி நிலத்திற்குள் செல்வதை இவை தடுக்கின்றன. பிற தாவரங்களை விட அதிக கார்பன்டை ஆக்சைடு வெளியிட்டு காற்றை மாசுபடுத்துகிறது. சீமைக்கருவேல மரங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் செயல்படுத்தலில் தாமதம் நீடிக்கிறது.

கீழக்கரை பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களின் அசுர வளர்ச்சியால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மக்கள் குடியிருக்கும் பகுதியிலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால் விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கொடிய நோய் போல் பரவி வரும் இம்மரங்களை முற்றிலுமாக அழித்து விவசாயம், குடிநீர் மட்டுமின்றி சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியது தற்போதைய அவசியமாக உள்ளது.

இதை முழுவதுமாக அகற்றுவதோடு, பொது இடங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பூங்காக்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள், நீராதார கரைகளில் பலன் தரும் மரக்கன்றுகளை நட உள்ளாட்சிகள் முன் வரவேண்டும். இதனை பயன்படுத்தி இழந்த சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.