ஆன்லைன் விற்பனை தளமான ஓ.எல்.எக்ஸ். தளத்தில் போலியான ரியல் எஸ்டேட் விளம்பரங்களை வெளியிட்டு பெருந்தொகையை மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஓ.எல்.எக்ஸ். ஆன்லைன் விற்பனை தளத்தில் எந்த ஆவணங்களும் இல்லாமல் நிலம் விற்பனைக்கு உள்ளதாக கூறி ஸ்மார்ட் ஹோம் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை நம்பி, கோவையை சேர்ந்த எல்சன் என்பவர் 11 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார். பின்னர், எந்த நிலத்தின் ஆவணமும் இல்லாமல் விளம்பரம் வெளியிடப்பட்டது தெரிய வந்ததால் எல்சன் கோவை மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஐந்து பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சந்திரன் என்பவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்த போது, இதேபோல ஸ்மார்ட் ஹோம் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக 19 புகார்கள் வந்துள்ளதாகவும், மனுதாரர் ஒத்துழைக்காததால் விசாரணையை தொடர முடியவில்லை எனவும் போலீஸ் தரப்பில், முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரர் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.