விருமன் படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் நடிகர் சூர்யாவின் 2 D நிறுவனத்தினரும், நடிகர்கள் கார்த்தி, சூரி, இயக்குனர் முத்தையா ஆகியோர் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் மற்றும் விருமன் கோயிலுக்கு சென்று வழிபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் பாப்பாபட்டியிலுள்ள ஒச்சாண்டம்மன் கோயில், கருமாத்தூரிலுள்ள விருமாண்டி கோயில் இந்த வட்டாரத்திலுள்ள மக்கள் பெருமளவில் வழிபடக்கூடிய கோயில்கள்.
ஒச்சாண்டம்மன் கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மாசி பச்சைத் திருவிழா பிரபலமானது. பல ஊர்களிலிருந்து மக்கள் திரண்டு வருவார்கள்.
இந்நிலையில் விருமன் சாமி பெயரை படத்தின் தலைப்பாகவும், உசிலம்பட்டி, தேனி வட்டாரத்தை கதைக்களமாகவும் கொண்டு எடுக்கப்பட்ட விருமன் திரைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இதன் வெற்றி விழாவை கொண்டாட நேற்று மதுரை வந்த நடிகர் கார்த்தி, சூரி, இயக்குநர் முத்தையா உள்ளிட்ட படக்குழுவினர் மாலையில் பாப்பாட்டியிலுள்ள ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்பு விருமாண்டி சாமிக்கும் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ரசிகர்களும், ஊர்மக்களும் நடிகர் கார்த்திக்கை காண திரண்டு வந்தனர். தங்கள் ஊரையும், மாசிப்பச்சை திருவிழாவையும் சிறப்பாக பதிவு செய்ததற்கு படக்குழுவினருக்கு ஊர் மக்கள் நன்றி தெரிவித்தனர்.