தமிழக மின் வாரியத்தின் சார்பில் விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, கட்டண விவரங்கள் குறித்த தங்களது கருத்துக்களை பொதுமக்கள், தொழில்துறையினர் தெரிவிக்க கருத்துக்கேட்பு கூட்டம் கோவை, மதுரையில் நிறைவடைந்துள்ளது. சென்னையில் நாளை (ஆக.22) கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், புதிய முன்மொழிவால் வீட்டு நுகர்வோருக்கு உயரும் கட்டணம் குறித்து கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்செயலர் கே.கதிர்மதியோன் கூறியதாவது: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய முன்மொழிவின்படி வீடுகள், குடியிருப்புகளுக்கு கூடுதல் மின் இணைப்பு பெற வேண்டுமெனில் அந்த வீட்டை வேறொரு குடும்பத்துக்கு வாடகைக்கோ, குத்தகைக்கோ விட்டிருந்தால் மட்டுமே இணைப்பு பெற முடியும். அவ்வாறு இணைப்பு பெற, வாடகைதாரர் ஒப்பந்தம், குத்தகை பத்திரம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
பல குடும்பங்களில் சகோதரர்கள், சகோதரிகள், பெற்றோர்கள் ஒரே குடியிருப்பின் வெவ்வேறு பாகங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு வசிப்பவர்கள் தனித்தனிரேஷன் அட்டை, எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். அவர்களை இருவேறு குடும்பங்களாகத்தான் கருத வேண்டும். அப்படி இருக்கும்போது, அவர்கள் அனைவரையும் எப்படி ஒரே குடும்பமாக மின்வாரியம் கருத முடியும்?
மேலும், புதிய விதிமுறைகளின்படி பெறப்படும் கூடுதல் மின் இணைப்புக்கு, நிலைக்கட்டணமாக ரூ.450 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், வாடகைதாரர் இருமாதங்களுக்கு ஒருமுறை, தான்பயன்படுத்தும் மின்சார யூனிட்டுகளுக்கான கட்டணத்தோடு சேர்த்து, இந்த நிலைக்கட்டணத்தையும் செலுத்த வேண்டி வரும்.
ஆனால், தனி வீட்டில் வசிக்கும் வாடகைதாரர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. அவ்வாறு இருப்பின், வாடகை வீட்டுக்கு செல்வோர் அனைவரும் தனி வீடு பார்த்து செல்ல வேண்டுமென மின்வாரியம் கருதுகிறதா?.
அதுமட்டுமல்லாது, அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, கூடுதல் மின் இணைப்பு பெற்றால், முதல் 100 யூனிட்டுக்கும் கட்டணம் வசூலிக்கும் நோக்கத்துக்காகவே இந்த நிலைக்கட்டண முன்மொழிவு உள்ளதாக கருத வேண்டியுள்ளது. எனவே, இந்த முன்மொழிவை ரத்து செய்ய வேண்டும்.
தனது குடியிருப்புக்கு எவ்வளவு மின்பளு தேவை என்பதை நுகர்வோர்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், குடியிருப்பின் பரப்பளவை வைத்து மின்பளு வகையை மின்வாரியமே நிர்ணயம் செய்யும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள இயலாது.
ஏனெனில், நகர் பகுதியில் உள்ள குடியிருப்புக்கு தேவையான மின்பளுவும், ஊரக பகுதியில் உள்ள குடியிருப்புக்கு தேவையான மின்பளுவும் வேறுபடும்.
உயரும் புதிய மின் இணைப்பு கட்டணம்
சேவை கட்டணம், மீட்டர் காப்புத் தொகை, பதிவு கட்டணம், வளர்ச்சி கட்டணம் என புதிதாக மும்முனை மின் இணைப்பு (புதைவட இணைப்பு) பெறுவதற்கான கட்டணம் கடந்த 2018-ல்மொத்தம் ரூ.7,450-ஆக (4 கிலோ வாட்) இருந்தது.
இந்நிலையில், அந்த கட்டணம் 2019 அக்டோபரில் ரூ.15,950-ஆக (4 கிலோவாட்) அதிகரிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகத்தின் புதிய முன்மொழிவில் அந்த கட்டணம் ரூ.54 ஆயிரமாக (8 கிலோ வாட்) அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டை ஒப்பிடும் போது, இது 625 சதவீதம் அதிகம் ஆகும்.இதே, புதிய ஒருமுனை மின் இணைப்புபெறுவதற்கான கட்டணம் 2018-ல் ரூ.1,600-ஆக இருந்தது, 2019 அக்டோபரில் ரூ.6,400 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய முன்மொழிவில் 9,620-ஆக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 2018-ம் ஆண்டை ஒப்பிடும்போது 501 சதவீதம் அதிகம் ஆகும்.
52.65 சதவீதம் அதிகம்
புதிய முன்மொழிவின்படி இரு மாதங்களுக்கு சேர்த்து வீடுகளில் 401 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர்தான் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். தற்போது 500 யூனிட் பயன்படுத்தினால் ஒருவர் ரூ.1,130 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டண உயர்வுக்கு பின் அவர் ரூ.1,725 செலுத்த வேண்டும். இது, 52.65 சதவீதம் அதிகம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.