ஜெய்பூர்: வளர்ந்த நாடுகளில் பெண்கள் அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் இன்னமும் சல்லடை வழியாக நிலவை பார்த்து தங்கள் கணவர் ஆயுள் விருத்திக்காக பெண்கள் வேண்டுவது துரதிருஷ்டவசமானது என்று ராஜஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார்.
இவரது அமைச்சரவையில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக இருப்பவர் கோவிந்த் ராம் மேக்வால்.
கணவரின் நீண்ட ஆயுள் பற்றி பேசுகிறார்கள்
கோவிந்த் ராம் மேக்வால் ஜெய்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் அசோக் கெலாட் முன்னிலையில் கோவிந்த் ராம் மேக்வால் பேசியதாவது;- சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பெண்கள் அறிவியல் உலகில் வாழ்கிறார்கள். ஆனால், நமது ஊரில் உள்ள பெண்களோ, நிலவை சல்லடை வழியாக பார்க்கும் கர்வா சௌத் பண்டிகைய கொண்டாடிவிட்டு கணவரின் நீண்ட ஆயுள் பற்றி பேசுகிறார்கள்.
மதத்தின் பெயரால் சண்டையிட வைக்கிறார்கள்
ஆனால், மனைவி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று கணவன் ஒருபோதும் சல்லடை வழியாக நிலவை பார்ப்பது கிடையாது. மற்றவர்களை மூட நம்பிக்கைகளுக்குள் தள்ளுபவர்கள், சாதி மற்றும் மதத்தின் பெயரால் சண்டையிட வைக்கிறார்கள்” என்று பேசினார். ராஜஸ்தான் அமைச்சரின் இந்த பேச்சு தற்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதனை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளதோடு, அமைச்சர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோரியுள்ளது.
அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் கோவிந்த் ராம் மேக்வால் மீது முதல்வர் அசோக் கெலாட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர் ராம்லால் ஷர்மா இது பற்றி கூறுகையில், “அமைச்சரின் கருத்து நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பெண்களை இழிவு படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அவர் மன்னிப்பு கேட்பதோடு தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். முதல்வர் அசோக் கெலாட் இந்த விவகாரத்தில் தலையிட்டு அமைச்சர் கோவிந்த் ராம் மேக்வால் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
கல்வியை ஊக்குவிக்கும் வகையில்..
நமது பாரம்பரியங்களை பின்பற்றும் இந்திய பெண்களுக்கு தொழிலையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சமநிலையுடன் பேண தெரியும். கல்பனா சாவ்லா விண்வெளிக்கு சென்றதையும் பல இந்திய பெண்கள் விமானிகளாக இருப்பதையும் அமைச்சர் அறிந்து இருக்க வேண்டும்” என்றார். பின்னர் தனது கருத்து குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் மேக்வால், ”நான் கர்வா சௌத்’திற்கு எதிரானவன் கிடையாது. அறிவியல் மனப்பான்மை மற்றும் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மட்டுமே நான் அவ்வாறு பேசினேன்” என்றார்.
கர்வா சௌத் என்றால் என்ன?
வட இந்தியாவில் இந்துக்கள் மற்றும் சீக்கிய மதத்தினர் மத்தியில் வருடம் தோறும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை கர்வா சௌத் ஆகும். கார்த்திகை மாதத்தில் தோன்றும் பவுர்ணமிக்கு பிறகு நான்கு நாள் கழித்து கர்வா சௌத் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு இருப்பர்.
சந்திரன் தென்படும் வரை உண்ணா விரதம்
காலையில் சூரியன் உதயம் ஆனதில் இருந்து மாலை சந்திரன் தென்படும் வரை உண்ணா விரதம் இருக்கும் பெண்கள், நிலவு மற்றும் தங்கள் கணவரை சல்லடை மூலம் பார்த்து ஆசிர்வாதம் பெற்ற பிறகு விரதத்தை முடிப்பார்கள். இந்த பண்டிகை உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.