உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு ‘உலகிற்கு உணவளிக்க’ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து நான்கு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் உள்நாட்டு தேவைக்காக இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்தியா.
இந்திய உணவுக் கழகத்தின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது, அதே நேரத்தில் கோதுமை பற்றாக்குறை 12% ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடும் வெப்பம் நிலவுவதால் இந்தியாவில் கோதுமை உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதுடன் அதன் விலை அதிகரித்துள்ளது. இதனால் கோதுமையை கொண்டு தயாரிக்கப்படும் சப்பாத்தி உள்ளிட்டவற்றை தங்கள் முக்கிய உணவாக பயன்படுத்தி வரும் கோடிக்கணக்கான இந்தியர்கள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோதுமை அறுவடை குறைந்ததை அடுத்து மே மாதத்தின் மத்தியில் கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இருந்தபோதும், தற்போதுள்ள நிலையில், கோதுமை தட்டுப்பாடு காரணமாக வெளிநாட்டில் இருந்து கோதுமையை வாங்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சில பிராந்தியங்களில் உள்ள மாவு ஆலைகளுக்கு தானியங்களை இறக்குமதி செய்ய உதவும் வகையில், கோதுமையின் மீதான 40% இறக்குமதி வரியை குறைக்கலாமா அல்லது ரத்து செய்யலாமா என்று அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளராக இருந்த போதிலும், இந்தியா ஒரு பெரிய ஏற்றுமதியாளராக இருந்ததில்லை. இறக்குமதியைப் பொறுத்தவரை, அதன் வெளிநாட்டு கொள்முதல் ஆண்டுதோறும் உற்பத்தியில் 0.02% ஆக இருந்தது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, 2021-22 ல் கோதுமை அறுவடை 111 மில்லியன் டன்களாக இருக்கும் என்று பிப்ரவரி மாதம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சுமார் 107 மில்லியன் டன்கள் அறுவடையாகும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், வர்த்தகர்கள் மற்றும் மாவு ஆலைகள் 98 மில்லியன் முதல் 102 மில்லியன் டன் வரை மட்டுமே அறுவடையாகும் என்று கணித்துள்ளனர்.
இருந்தபோதும், கோதுமை இறக்குமதி 2021 ம் ஆண்டை விட பாதிக்கும் குறைவாகவே இருக்கும் என்று உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜூலை மாதம் கோதுமை நுகர்வோர் எண்ணிக்கை 11.7% அதிகரித்துள்ளது அதேவேளையில் மொத்த விலைகள் ஜூலை மாதத்தில் 13.6% உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது.