டெல்லி மாநில கலால் கொள்கை ஊழல் தொடர்பாக கடந்த வெள்ளியன்று, டெல்லியின் துணை முதல்வரும், ஆம் ஆத்மி அமைச்சருமான மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ஆம் ஆத்மியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரொருவர் ஏற்கெனவே ஊழல் வழக்கில் கைதாகியிருக்கும் நிலையில், தற்போது மணீஷ் சிசோடியா மீதான சிபிஐ நடவடிக்கைக்கு, கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி தலைவர்கள் பலரும் மோடி மற்றும் பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில், மணீஷ் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் ஒன்றையும் சிபிஐ வெளியிட்டது.
இந்த நிலையில் மணீஷ் சிசோடியா, லுக் அவுட் நோட்டீஸுக்கு பதிலளிக்கும் வகையில் மோடியை விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய மணீஷ் சிசோடியா, “சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் இன்று யாருக்கு எதிராக வெளியிட வேண்டும் என மோடி நினைத்துக் கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று. அரவிந்த் கெஜ்ரிவாலையும், மணிஷ் சிசோடியாவையும் பூஜ்ஜியமாக்குவதன் மூலம் அவர்களால் என்ன சாதிக்க முடியும்?
நாடே இன்று பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றுக்குத் தீர்வைத் தரக்கூடிய ஒரு தலைவரை தேடிக்கொண்டிருக்கிறது. சுகாதாரம் மற்றும் கல்வி பற்றி சிந்திக்கும் ஒரு பிரதமர் தான் நாட்டுக்கு தேவை. மேலும் 2024-ல் அவர்களின் வாக்குறுதிகளைக் கேட்ட பிறகு, பொதுமக்கள் அவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள்” என கூறினார்.
முன்னதாக மணீஷ் சிசோடியா ட்வீட் ஒன்றில், “இப்போது மணீஷ் சிசோடியா கிடைக்கவில்லை என்று லுக் அவுட் நோட்டீஸை வெளியிட்டிருக்கிறீர்கள். இது என்ன நாடகம் மோடி ஜி? டெல்லியில் நான் சுதந்திரமாக சுற்றித் திரிகிறேன். என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? எங்கு வர வேண்டும் என்று சொல்லுங்கள்?” கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.