சென்னை: தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருபவர் எஸ்ஜே சூர்யா.
சிம்புவுடன் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் எஸ்ஜே சூர்யாவுக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.
இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் எஸ்ஜே சூர்யா, தனது ஆரம்பகால நினைவுகளை கண்கலங்க பேசியுள்ளார்.
இயக்குநராக அறிமுகம்
நெல்லை அடுத்த வாசுதேவநல்லூரைச் சேர்ந்த எஸ்ஜே சூர்யா, சென்னை லயோலா கல்லூரியில் தான் பட்டப்படிப்பை முடித்தார். ஆரம்பத்தில் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்ததாம். ஆனால், ஹீரோவிற்கான லுக் இல்லையென பலரும் அவரை விமர்சித்ததால் இயக்குநராக வேண்டும் என முடிவெடுத்துள்ளார். கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட் எஸ்ஜே சூர்யா, வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அஜித் கொடுத்த நம்பிக்கை
எஸ்ஜே சூர்யாவை இயக்குநராக வாய்ப்பு வழங்கியது அஜித் தான். ‘வாலி’ படத்தின் கதையைக் கேட்டு மிரண்டுப் போன அஜித், எஸ்ஜே சூர்யாவை நம்பி அந்தப் படத்தில் நடித்தார். வாலி வெளியாகி அஜித்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, நடிப்புத் திறமைக்கும் சிறந்த சான்றாக கொண்டாடப்பட்டது. எஸ்ஜே சூர்யாவின் மேல் நம்பிக்கை மட்டும் வைக்காமல், தனது இயக்குநர் பைக்கில் வரக்கூடாது என கார் வாங்கிக் கொடுத்து மகிழ்வித்தார் அஜித். இதனை எஸ்ஜே சூர்யா பலமுறை உருக்கமாகக் கூறியுள்ளார்.
இயக்குநர் டூ நடிகர்
வாலியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் எஸ்ஜே சூர்யா இயக்கிய குஷி திரைப்படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தொடர்ந்து நியூ, அன்பே ஆரூயிரே, இசை ஆகிய படங்களை இயக்கிய எஸ்ஜே சூர்யா, அதில் தானே ஹீரோவாக நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். அங்கிருந்து தொடங்கிய நடிகர் என்ற எஸ்ஜே சூர்யாவின் புதிய பயணம், இறைவி, மான்ஸ்டர், மாநாடு என வெரைட்டியாக வெளுத்து வாங்குகிறார்.
முதல் சம்பளம் முதல் வேலை
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தரமான வில்லன் நடிகராக கலக்கி வரும் எஸ்ஜே சூர்யா, தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது பழைய நினைவுகள் குறித்தும் முதல் சம்பளம் பற்றியும் மனம் திறந்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்காக அவர் கொடுத்திருந்த பேட்டியில், “சினிமா தான் வாழ்க்கை என்றானதும், வீட்டில் பணம் வாங்காமல், லயோலா காலேஜில் என்னுடன் படித்த மாணவனுக்குச் சொந்தமான ஹோட்டலில் பில் போடும் வேலை பார்த்தேன். காலை 9.30 மணியில் இருந்து பில் போட்டுவிட்டு, மதியம் 2 மணிக்கு சாப்பிடும் போது அப்படி இருக்கும்” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். “என்ன இருந்தாலும் அந்தநாள் அந்த அனுபவம் அப்படித்தான்” எனவும் அவர் மனம் திறந்துள்ளார்.