சிம்லா: காங்கிரஸ் கட்சியின் இமாச்சலப் பிரதேசத்தின் ‘வழிகாட்டுதல் குழு’ தலைவராக நியமிக்கப்பட்டிருந்த கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதே போல சில நாட்களுக்கு முன்னர் கட்சியின் ஜம்மு காஷ்மீர் தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் பதவி விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதனையடுத்து தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் ‘வழிகாட்டுதல் குழு’ தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக்குழு தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான குலாம் நபி
ஆசாத்தை கட்சி நியமித்தது. இந்த நியமன அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே ஆசாத், இந்த பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தனது உடல்நிலையை காரணமாக ஆசாத் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் வேறு சில காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவத்தின் சலசலப்பு ஓயாத நிலையில், தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது இமாச்சலப் பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு தலைவராக நியமிக்கப்பட்ட ஆனந்த் சர்மா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இம்மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ஆனந்த் கடிதம் எழுதி இருந்ததாகவும், அதில், கட்சியின் முடிவுகளில் இருந்து விலகி இருப்பதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இதனைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்துள்ளார். தேர்தலுக்கான ஆலோசனை செயல்பாட்டில் தான் புறக்கணிக்கப்பட்டதாக ஆனந்த் ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார். இதன் காரணமாகவே அவர் ராஜினாமா செய்திருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் இவ்வாறு குற்றம் சாட்டியபோதும் கூட, கட்சி வேட்பாளர்களுக்காக தொடர்ந்து பிரசாரம் செய்வேன் என ஆனந்த் கூறியிருந்தார். முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவையில் காங்கிரஸின் துணைத் தலைவருமான இவர், இமாச்சலப் பிரதேசத்தில் கட்சியின் “வழிகாட்டிக் குழு” தலைவராக ஏப்ரல் 26 அன்று நியமிக்கப்பட்டார்.
ஏற்கெனவே ராஜினாமா செய்த ஆசாத்தும், தற்போது ராஜினாமா செய்திருக்கக்கூடிய ஆனந்தும் கட்சியின் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் G-23 தலைவர்களில் முதன்மையானவர்களாவார்கள். மேற்குறிப்பிட்டதைப்போல சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்த ஆனந்த், கட்சியின் எந்தக் கூட்டங்களுக்கும் தன்னைக் கலந்தாலோசிக்காததால் அல்லது அழைக்கப்படாததால் தனது சுயமரியாதை புண்படுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் எப்படியாவது பாஜகவை வீழத்திவிட வேண்டும் என முடிவெடுத்துள்ளது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் மாநிலத்தில் மும்முனை போட்டியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற உட்கட்சி அரசியல் சர்ச்சைகளில் காங்கிரஸ் சிக்கிக்கொண்டுள்ளது.