சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை படப்பிடிப்பு தளத்தில் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அவற்றை சரி செய்து சீரியல்கள் மற்றும் சினிமாவை எடுத்து முடிப்பதற்குள் அந்த தயாரிப்பாளர் சந்திக்கும் சிக்கல்கள் அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். சினிமா துறையில் இருக்கும் இந்தப் பிரச்சனை அனைத்து மொழிகளிலும் இந்தியா முழுவதும் இருக்கிறது. அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கன்னட நடிகர் அனிரூத் 2 ஆண்டுகள் சீரியல்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளார்.
ஜோதே ஜோதேயாலி என்ற நாடகத்தில் நடித்து வந்தார். இயக்குநர் ஆரூர் ஜெகதீஷ் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த நாடகத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து பாதியில் வெளியேறிய அவர், மீண்டும் சூட்டிங்கில் பங்கேற்கவில்லை. சீன் பேப்பர் மற்றும் கேரவன் விவகாரம் தொடர்பாக இயக்குநருக்கும் அனிரூத்துக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. குறிப்பாக, தனக்கென ஒரு தனி கேரவன் வேண்டும் என அவர் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் மற்றும் நடிகர் அனிரூத்துக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படாததால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பிரச்சனை சென்றது. இதற்கிடையே நாடகத்தின் சூட்டிங் தடைபட்டு அப்படியே இருந்துள்ளது. சின்னத்திரை நாடக தயாரிப்பாளர்கள் சுமூக பேச்சுவார்த்தை நடத்த, அதிலும் முடிவு எட்டப்படவில்லை. இதனால், நடிகர் அனிரூத் மீது சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடுக்கு வராத அவர் மீது 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் அனிரூத், இந்தப் பிரச்சனையில் தன் மீது எந்த தவறும் இல்லை எனக் கூறியுள்ளார். சீன் பேப்பர் கேட்டும் கொடுக்கவில்லை எனத் தெரிவித்த அவர், தன்னைப் பற்றி ரசிகர்களுக்கு தெரியும் என கூறியுள்ளார்.