கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக்கடை அடுத்த பூட்டேற்றியை சேர்ந்தவர் விக்ரமன் (60). இவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் திங்கள்நகர் பகுதியில் கடந்த சில காலமாக யாசகம் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவரை அடையாளம் கண்டனர் சிலர். மேலும் ஓய்வுபெற்ற ஏட்டு ஒருவர் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் யாசகம் பெற்று வாழ்ந்து வருவதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத்துக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து அவருக்கு முகச்சவரம் செய்து, புதிய உடைகள் அணிவித்து நாகர்கோவில் அருகே உள்ள புளியடியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுள்ளார்.
இதுபற்றி விக்ரமன் கூறுகையில், “எனது சொந்த ஊர் பூட்டேற்றி. அங்கு உள்ள குடும்ப சொத்தை விற்று தங்கையை திருமணம் செய்து கொடுத்தேன். அவர் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மனைவிக்கு வீடு கேரளா என்பதால், நான் சம்பாதித்த பணத்தில் கேரளாவில் வீடு கட்டி அங்குதான் வசித்து வந்தேன். நான் நோய்வாய்பட்டதால் எனது இரண்டு மகன்களும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
எனது ஏ.டி.எம் கார்டை வாங்கிக்கொண்டு சென்று பென்சன் பணத்தை என் மகன்கள் எடுத்ததால், கார்டை பிளாக் செய்து விட்டேன். எனது ஓய்வூதிய புத்தகம் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்றுவிட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இத்தனை ஆண்டுகள் யாசகம் கேட்டு திங்கள்நகர் பஸ் ஸ்டாண்டில் வாழ்ந்து விட்டேன். நான் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு என்பதை தெரிந்து தற்போது பலர் பேசுகின்றனர். எனது போலீஸ் நம்பர் 1539, கடைசியாக களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்து மார்த்தாண்டம் எஸ்.பி.ஐ வங்கியில் பென்சன் வாங்கினேன். அதிகாரிகள் எனது பண பலன்களை பெற்றுத்தந்தால் கடைசி காலத்தை நிம்மதியாக வாழ்வேன்” என்றார்.
விக்கிரமனின் மனைவி மற்றும் இரண்டு மகன்களும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாறசாலை அருகே வசிக்கிறார்கள். இதுபற்றி விக்ரமனின் குடும்பத்தினர் தரப்பில் நம்மிடம் கூறுகையில், “விக்கிரமனின் மனைவி தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்துவருகிறார். இரண்டு மகன்களும் திருமணம் செய்துவிட்டனர். விக்கிரமன் போலீஸ் பணியில் இருக்கும்போது மனைவி மற்றும் பிள்ளைகளை கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவது வழக்கமாம். அவருக்கு வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருந்ததால் குடும்பத்தை வெறுத்தே வாழ்ந்துவந்தார்.
களியக்காவிளை காவல் நிலையத்தில் வேலை செய்தபோது அவர் செய்த தவறுக்காக கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. அதை அவர் சொல்ல மறுக்கிறார். ஓய்வுக்கு பிறகும் அவர் குடும்பத்தை கவனிக்கவில்லை. குடும்பத்தினர் சித்திரவதை அனுபவித்தனர். அவரின் ஏ.டி.எம் கார்டு, ஓய்வூதிய புத்தகங்களை மகன்கள் எடுத்துவிட்டு சென்றதாக சொல்கிறார். எந்த ஆவணம் தவறினாலும் அதை திரும்ப எடுக்கும் வசதி உள்ளது என்பது தலைமை காவலராக இருந்த அவருக்கு தெரியாதா?. சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாய ஓய்வில் சென்றார். 2014-ம் ஆண்டுக்கு பிறகு அவர் எங்கிருக்கிறார் என்றே குடும்பத்தினருக்கு தெரியாது. குழந்தைகளை வளர்ப்பதற்காக அவரின் மனைவி தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலைக்குச் சேர்ந்தார். கஷ்டப்பட்டு இன்று அவரது மகன்கள் சொந்தகாலில் நிற்கிறார்கள். குடும்பத்துக்காக எதுவும் செய்யாத விக்ரமன் வேண்டுமென்றே குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டுகிறார்” என்றனர்.