முசாஃபர்நகர்: உத்தரபிரதேசத்தில் கிராமத் தலைவர் ஒருவர் தலித் இளைஞரை செருப்பால் தாக்கிய வீடியோ வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ராஜஸ்தானில் உள்ள பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு தனது பானையில் தலித் சிறுவன் தண்ணீர் எடுத்து குடித்ததற்காக அவனை ஆசிரியர் மூர்க்கமாக தாக்கியதில் அவன் உயிரிழந்தான். இதேபோல, உத்தரபிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு தனக்கு பணிவிடைகள் செய்யாமல் பள்ளி சென்றதற்காக 10-ம் வகுப்பு மாணவனை மாற்று ஜாதி இளைஞர் ஒருவர் தனது செருப்பை நாக்கால் சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள தாஜ்பூர் கிராமத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த கிராமத்தின் தலைவரான சக்திமோகன் குர்ஜார் நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த தலித் வகுப்பைச் சேர்ந்த தினேஷ் குமார் (27) என்ற இளைஞரை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். தினேஷ் குமார் வந்ததும் தரையில் உட்காரும் படி சக்திமோகன் கூறுகிறார். அதையடுத்து அவர் தரையில் அமரும் போது முதலில் கையாலும் பிறகு தான் அணிந்த செருப்பை எடுத்தும் தினேஷ் குமாரை அவர் சரமாரியாக அடிக்கிறார். பின்னர் ரேடா நாக்லா கிராமத்தின் முன்னாள் தலைவர் கஜே சிங்கும் அந்த இளைஞரை அடித்து அங்கிருந்து விரட்டுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். மேலும், இந்த வீடியோவை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில டிஜிபி உள்ளிட்டோருக்கும் சிலர் ஷேர் செய்தனர்.
இந்த விவகாரம் தாஜ்பூர் கிராமத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமத் தலைவருக்கு எதிராக அங்கு தலித் அமைப்புகள் பேரணி நடத்தி வருகின்றன. இதனால் அங்கு கலவரம் உருவாகும் சூழல் ஏற்பட்டது. பிரச்சினை பூதாகரமானதை உணர்ந்த போலீஸார், அப்பகுதிக்கு சென்று தாஜ்பூர் கிராமத் தலைவர் சக்திமோகனை கைது செய்தனர். ரேடா நாக்லா கிராம முன்னாள் தலைவர் கஜே சிங் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இருவர் மீதும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.