ஆவடி: சென்னை புழல் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ராட்சத குழாய்கள் மூலமாக ஆவடி மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றப்பட்டு, ஆவடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இதற்கிடையே, கடந்த ஒரு மாதத்துக்கு முன் திருமுல்லைவாயல் காவல் நிலையம் எதிரே புழல் ஏரியிலிருந்து வரும் ராட்சத குடிநீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் உடைந்து போன குடிநீர் குழாயில் அரைகுறையாக சரிசெய்யும் பணிகள் நடைபெற்றன.
எனினும், அந்த சேதமான குழாய் வழியே மீண்டும் அதிகளவு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் திருமுல்லைவாயல் பகுதி சாலைகளில் குடிநீர் தேங்கி நிற்பதால் சேதமடைந்து வருகின்றன. குண்டும் குழியுமாக மாறிய சாலை வழியே வாகனங்களில் சென்று வரும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மக்கள் புகார் அளித்தும், அவற்றை சீரமைப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, மக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிநீர் வீணாகி வெளியேறுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.