தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018ம் ஆண்டு 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் 100வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை பொதுமக்கள் நடத்தினர். ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி போராட்டக்கார்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, வன்முறை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அப்போதைய அதிமுக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது “ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க 2018-ல் ஜெயலலிதாவின் அரசுதான் ஆணையம் அமைத்தது. அதே நேரத்தில், ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதமே சீல் இடப்பட்ட உறையில் வைத்து ரகசிய அறிக்கையாக இந்த அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை 3,000 பக்கங்களைக் கொண்டது என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த அறிக்கையில் என்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று யாருக்கும் தெரியாது. அரசும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் அருணா ஜெகதீசன் அறிக்கையில் என்னென்ன உள்ளது என்பது பற்றி ஒரு ஆங்கில இதழ் வெளியிட்டுள்ளது. அந்த ஆங்கில ஏட்டிற்கு ஆட்சியாளர்களே தகவலை கசியவிட்டார்களா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாதம் இருமுறை வெளியாகும் ஆங்கில பத்திரிகைக்கு தகவலை கசிய வட்டவர்கள் யார் என விசாரணை செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.