பெங்களூரு : ”பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளின் நிலையை மேம்படுத்தவும், கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும், 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய, மாநில அரசு முடிவு செய்துள்ளது,” என, முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.பெங்களூரு விதான் சவுதாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் ஏற்பாட்டில் மறைந்து முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் 107வது பிறந்த நாள் விழாவை முதல்வர் பசவராஜ் பொம்மை துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:அனைத்து தங்கும் விடுதிகளின் திறனை 25 சதவீதம் அதிகரிக்க, மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. 2,439 விடுதிகளுக்கு கூடுதல் மானியம் விடுவிக்கப்பட்டு, மாணவர்களுக்கு 150 ரூபாய் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 195 விடுதிகள் பல்வேறு கட்டட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.கனகதாசர் பெயரில் 50 புதிய தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் உள்ள 5 கல்வி மையங்களில், 1,000 மாணவர்கள் தங்கும் வகையில் பல மாடி விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. 5,000 மாணவர்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டு, நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.’டி.தேவராஜ் அர்ஸ்’ என்ற பெயரில் பி.எச்.டி., படிக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க, 4 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க 10 கோடி ரூபாய் கூடுதல் மானியமாக வழங்கப்படுகிறது.
‘நாராயண குரு’ பள்ளிகள்
30 கோடி ரூபாய் செலவில் ‘நாராயண குரு’ பெயரில் நான்கு புதிய பள்ளிகள் தொடங்கப்படும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கீழ் உள்ள பல்வேறு வாரியங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு, 800 கோடி ரூபாய் கூடுதல் மானியம் வழங்கப்பட்டுள்ளது.மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் சுவாமி விவேகானந்தர் இளைஞர் மன்றம் அமைக்கவும், விளை பொருட்களுக்கு சந்தைப்படுத்தவும்
அரசு 10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கி வருகிறது.அரசு செய்யும் மற்ற விஷயங்கள்; ஸ்த்ரி -சக்தி குழுக்களுக்கு நிதியுதவி, வங்கி இணைப்பு மற்றும் சந்தைப்படுத்தல் வசதிக்கு 5 லட்சம் ரூபாய் உதவி, சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு மடங்களுக்கு 129 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தேவராஜ் அர்ஸின் கனவுகளை நனவாக்கி, சமூக நீதியின் அடிப்படையில் செயல்படுத்துவதே அரசின் நோக்கமாகும்.கர்நாடகாவின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்தில் அவர் பெரும் பங்கு வகித்துள்ளார். அவர் ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார். ஏழைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அர்ஸின் ஆளுமை எப்போதும் உத்வேகத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement