மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமானவரும், உக்ரைன் தாக்குதலுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்தவருமான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா கார் குண்டு வெடிப்பில் பலியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமானவர் அலெக்சாண்டர் டுகின். இவர் புதினின் மூளை என்று அழைக்கப்படுபவர். உக்ரைனில் ரஷ்ய ராணுவ நடவடிக்கைகளுக்கு பின்னால் இவரே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவரது மகள் கார் குண்டு வெடிப்பில் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அதிகாரிகள் தரப்பில், “ அலெக்சாண்டர் டுகின் பயணம் செய்ய வேண்டிய காரில் கடைசி நேரத்தில் அவரது மகளான டாரியா டுகினா பயணம் செய்திருக்கிறார் இந்த நிலையில். மாஸ்கோவுக்கு 40 கிமீ தொலைவில் டாரியா பயணம் செய்த காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அவர் பலியானார்” என்று தெரிவித்துள்ளனர்.
டாரியாவின் இந்த மரணம் ரஷ்யாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டாரியாவின் மரணம் தொடர்பாக புதின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
புதினின் ராணுவ நடவடிக்கைகளுக்கு மூளையாக செயல்படும் அலெக்சாண்டர் டுகினுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.