அந்த ஃபுட்பால் டீம் பல வருடங்களாக எந்தக் கோப்பையையும் ஜெயித்ததாகச் சரித்திரமே கிடையாது. அதில் இடம்பெற்றிருக்கும் நாயகனுக்கும் பெரிதாக ஆட்டத்திறன் என்று எதுவும் கிடையாது. ஆனால், அவனுக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. அவனுக்கு ஃபுட்பாலைவிட மேஜிக்கில் ஆர்வம் அதிகம். இப்படிப்பட்ட டீம் போட்டியில் ஜெயித்து ’தபோல்கர்’ கோப்பையை வென்றதா, அப்பா – சித்தப்பாவின் கனவை மெஜிஷியன் ஹீரோ நினைவாக்கினாரா என்பதுதான் ‘ஜாதுகர்’ படத்தின் மீதிக்கதை.
மெஜிஷியன் கதாபாத்திரத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டாரா அல்லது இவரது முகத்துக்காக இந்தக் கதை உருவாக்கப்பட்டதா என்று யோசிக்கும் அளவுக்குப் பொருந்துகிறார் நாயகன் ஜிதேந்திர குமார். துறு துறுவென்று செய்யும் சின்ன சின்ன மேஜிக்குகளாலும், ஹீரோயிஸமே காட்டாத கலகல பேச்சாலும் மனதைக் கொள்ளையடித்து விடுகிறார். ஆனால், காதலுக்காகப் படம் முழுக்க ஜிதேந்திர குமார் செய்யும் சேட்டைகள் ’கொக்கி குமார்’ ரேஞ்ச்.
’இச்சா’வாக சிறிது நேரமே வந்தாலும் பார்வையாளர்களின் இதயங்களைக் கொய்துவிட்டுப் போய்விடுகிறார் நாயகிகளில் ஒருவரான ருக்ஷர் தில்லோன். ஆனால், நாயகன் மட்டுமல்ல, முதலில் வரும் நாயகியையும் மறக்கடித்துவிடுகிறார், மற்றொரு நாயகியான ஆருஷி ஷர்மா. பார்த்தவுடன் காதல், பழகியவுடன் காதல் என்றில்லாமல் பக்குவப்பட்ட கதாபாத்திரமாக மிளிர்ந்திருக்கிறார். அதுவும், ஆபத்து சூழ்ந்த ஓர் இரவுக் காட்சியில் பேசிக்கொள்ளாமல் சைக்கிள் பெல் அடித்து நாயகன் நாயகிக்கு வழி காட்டும் காட்சி செம்ம சுவாரஸ்யம்.
தொடர் தோல்விகள் ஏற்படுத்திய வலி, வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற வெறி என எல்லாவற்றையும் சுமந்துகொண்டு சீரியஸான கதாபாத்திரத்தால் திரைக்கதையைச் சுமந்து செல்கிறவர் சித்தப்பா பிரதீப்பாக நடித்திருக்கும் சிஜாவேத் ஜெஃப்ரிதான். “கால்பந்து விளையாடப்போறோம். உற்சாகமா பேசி எங்களை வாழ்த்தலாமே” என்று போட்டியாளர் கேட்க, “காலால் பந்தைத் தொடும்போதே எல்லா உற்சாகமும் தானா வந்துடும்” என்று சிஜாவேத் சொல்லும் இடம் கூஸ்பம்ஸ்.
ஆரம்பக் காட்சிகளில் அட்வைஸ் செய்து துணை நிற்கும் குருநாதர் மனோஜ் ஜோஷி, எதிர்காலத்தில் எதிரியாக மாறுவது திரைக்கதையின் மேஜிக். நாயகனின் சித்தப்பா மகனாக வரும் ராஜ் க்யூஷாலும் வித்தியாசமான கெட்-அப்பில் புன்னகைக்க வைக்கிறார்.
விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நாயக பிம்பம் கொண்ட ஹீரோக்கள் என்ட்ரி ஆகியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அதேதான்! ஆனால், இப்படத்தில் ஹீரோவுக்கு அப்படிப்பட்ட பில்டப் ஓப்பனிங் காட்சிகள் எதுவும் கிடையாது. ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டமைப்பை உடைத்துவிடுகிறார் இயக்குநர் சமீர் சக்சேனா.
அதுவும், ”ஃபைனலில் உங்கள் அணியைத் தோற்கடிக்க வேண்டும்” என்று நாயகி தரப்பில் வைக்கப்படும் கோரிக்கையால் குழம்பிப்போகும் நாயகன், ஒரு கட்டத்தில் தனது டீமைத் தோற்கடிக்க அனைத்து விதமான முயற்சியையும் மேற்கொள்கிறான். அதிலும், நெகிழும்படியான ட்விஸ்ட்கள் ரசிக்க வைக்கின்றன.
பில்ட் அப்புகள் இல்லாத செளமிக் முகர்ஜியின் சாதாரண ஒளிப்பதிவும் நிலோட்பல் போராவின் இசையும் பாடல்களும் படத்திற்குப் பெரிய எனர்ஜி. மொழி வேறு என்றாலும் ஒவ்வொரு பாடலும் நம் மனதில் தனித்துப் பதிவது உறுதி.
திரைப்படங்களில் வழக்கமாகத் திணிக்கப்படும் ட்விஸ்ட்களை உடைத்துத் தெளிந்த நீரோடைபோல் பயணிப்பதுதான் கதையின் ப்ளஸ். அப்பா என்னதான் ஃபுட்பால் ப்ளேயராக இருந்தாலும் அதன்மீது ஆர்வம் வராமல் போனதற்கான காரணமும் மெஜிஷியன் ஆகின்ற காரணங்களும் ஓகேதான். ஆனால், பிரேக் அப் ஆகும்போதுகூட, புரபோஸ் பண்ணும்போதுகூட மேஜிக்கை மிஸ் யூஸ் செய்யாத நாயகன் க்ளைமாக்ஸில் தடம் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதேபோல, ஒரு ஏரியாவில் நடக்கும் சின்ன கதைதான் இப்படம். அதனை இவ்வளவு நீளமாக இழுத்துக்கொண்டே சென்றது சற்றே சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
வழக்கமான இந்தி பட ஹீரோயிஸ மேஜிக்குகளைச் செய்யாமல் லாஜிக்குகளுடன் பயணித்து நம் மனதை வென்று விடுகிறது மேஜிக் நிபுணர் படமான இந்த ‘ஜாதுகர்’. ஏன் வெல்கிறது என்பதைச் சொல்லிவிட்டால் ஸ்பாய்லர் ஆகிவிடும். அதனால், தவிர்த்துவிடலாம்.