மதுரை: மதுரை சிம்மக்கல் கல்பாலம் வைகை ஆற்று பகுதியில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் நேற்றிரவு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் செல்லூர் ராஜூ கூறியதாவது: மதுரை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடியாக பைப் லைன் மூலம் 125 கனஅடி நீரை கொண்டு வர, ‘அம்ருத் திட்டத்தின்’ கீழ் ரூ.1,296 கோடி மதிப்பீட்டில், திட்டப்பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இத்திட்டத்தில் மதுரையில் மட்டும் 82 மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.
இந்த பணிகளில் முன்பு தொய்வு இருந்தது. இதுதொடர்பாக நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தேன். திட்ட பணிகள் விரைவாக நடப்பதாகவும், வரும் 2023க்குள் பணிகள் முடிந்து விடும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல், மாநகராட்சி ஆணையரும் பணிகளை விரைவுப்படுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. வைகை ஆற்றின் இருபுறமும் சாலை பணியை முடிக்க கோரி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பணி விரைவாக முடிவடையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் நகரில் நெரிசல் குறையும் என்றார்.