இயேசுவின் சீடருக்கே சமாதி; சென்னையின் கருப்பு பக்கம்!

தமிழ்நாட்டின் தலைநகராக விளங்கும் சென்னையை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும், ‘சென்னை தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் உலக கிறிஸ்தவர்களின் வரலாற்றில் சென்னைக்கென ஒரு கருப்பு பக்கமும் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

உலகில் பெரும்பாலான மக்கள் கொண்டாடும் பண்டிகை கிறிஸ்துமஸ். இரு நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை மிகப்பெரிய விடுமுறை காலமாக கருதுகிறார்கள்.

இதற்கெல்லாம் அடித்தளம் ஒற்றை மனிதர் இயேசு. மனிதனால் பூமியில் அவதிரித்து மரணத்துக்கு பிறகு மீண்டும் விண்ணகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் என்று இயேசு கிறிஸ்துவுக்கு கிறிஸ்தவ சமயம் பறைசாற்றுகிறது.

அப்படிப்பட்ட இயேசுவுக்கு 12 சீடர்கள் இருந்ததாக விவிலியம் கூறுகிறது. இந்த 12 சீடர்களில் ஒருவர் தான் புனித தோமையார். இயேசு உயிரோடு இருக்கும் வரையிலும் தோமையார் குறித்து விவிலியத்தில் பெரிதாக எதுவும் இல்லை.

இயேசு மரித்து உயிர்த்து எழுந்த பிறகு பூட்டப்பட்ட அறைக்குள் இருந்த சீடருக்கு மத்தியில் தோன்றினார். அப்போது தோமையார் அங்கு இல்லை. பின்னர் தோமையார் வந்ததும் சீடர்கள் இயேசு உயிர்த்தெழுந்தது குறித்தும், காட்சி தந்தது குறித்தும் விளக்கினர்.

அதற்கு தோமையார், ‘இயேசுவின் கைகளில் ஆணி அறையப்பட்ட துளைகளை கண்ணால் கண்டு, அவற்றில் எனது விரல்களை விட்டாலொழிய நான் நம்பமாட்டேன்’ என்று கூறினார். (யோவான்: 20:25)

ஆனால், 8 நாட்கள் கழித்து மீண்டும் இயேசு தோன்றி, ‘தோமாவே… இதோ ஆணிகள் அறையப்பட்ட துளைகள். இதில் உன் விரலை வை’ என கேட்டதால், மனம் குமுறி தோமா மன்னிப்பு கேட்டு விசுவாசம் பெற்றார்.

அதற்காக இயேசு அவரை கடிந்து கொண்டார். அப்போது, ‘நீ.. என்னை கண்டதால் நம்பினாய். என்னை காணாமல் நம்பியவர்களே பேறுபெற்றவர்கள்’ என்று இயேசு கூறியது முதல் சந்தேக தாமஸ் ( Doubting Thomas) என்றும் அழைக்கப்பட்டார்.

அப்படிப்பட்ட தோமையார் இயேசுவின் இறப்புக்கு பிறகு, சமயத்தை பரப்புவதற்காக கிளம்பிய இடம் தான் இந்தியா என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இவ்வறு கிபி 52ல் இந்தியாவுக்கு வந்த தோமையார் கேரளாவின் அப்போதைய துறைமுகமான கொடுங்கல்லூரில் இறங்கி உள்ளார்.

இதன் பின்னர், தோமையார் கிழக்கு கடற்கரைக்கு இடம்பெயர்ந்து கிபி 72ல் சென்னைக்கு அருகில் இருக்கும் புனித தோமையார் மலை (தாமஸ் மவுண்ட்) என்று இன்று அழைக்கப்படும் குன்றில் வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது ஒரு மதவெறியனால் தோமையார் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் மயிலாப்பூருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதாகவும் இந்த கல்லறை மீது தான் சாந்தோம் தேவாலயம் எழுப்பப்பட்டது என்றும் கிறிஸ்தவ வரலாறு தெரிவிக்கிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் போப் இரண்டாம் பயஸ் கடந்த 1952 டிசம்பர் 31ம் தேதி அனுப்பிய செய்தியில், ‘புனித தோமையார் இந்தியா வந்து 1900 ஆண்டுகள் தாண்டிவிட்டன.

இந்தியா தனது முதல் அப்போஸ்தலரின் பாரம்பரியத்தை பேணிக்கொண்டது. இந்தியாவில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துக்கள்’ என்று, போப் இரண்டாம் பயஸ் அறிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 1955 டிசம்பர் 18ம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் தோமையர் தினம் கொண்டாடப்பட்டபோது, ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், ‘புனித தோமையார் இன்று கிறித்தவத்தை பின்பற்றுகிற பல நாடுகள் தோன்றுவதற்கு முன்பாகவே இந்திய கடற்கரைக்கு வந்தார். இந்திய கிறிஸ்தவர்கள் ஐரோப்பிய கிறிஸ்தவர்களை விட பழமையானவர்கள்’ என சான்று பகர்ந்தார்.

இவ்வாறு, இயேசுவின் சீடர் புனித தோமையார் சென்னையில் கொலை செய்யப்பட்டதாக சான்றுகள் தெரிவிப்பதன் மூலம், உலக கிறிஸ்தவர்களின் மனதிலும் நீங்காத இடத்தை சென்னை பிடித்துள்ளது.

தற்போது சென்னை தினம் கொண்டாடப்படும் சூழலில், கிறிஸ்தவ வரலாற்றில் ‘சென்னை’ ஒரு கருப்பு பக்கமாக அமைந்து இருப்பதை மறைத்துவிட்டு அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது என்பது தான் யதார்த்தமான ஒன்று.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.