கிருஷ்ணகிரி: ஓபிஎஸ் அரசியலில் இருப்பதற்கே எந்தவிதமான தார்மீக அடிப்படையும் இல்லை என்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், இன்று (21ம் தேதி) பங்கேற்ற கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஓ.பன்னீர்செல்வம், உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலே அனைவரும் வாருங்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற தோரணையில் அழைத்திருக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. காரணம் கடந்த 23-ம் தேதி நடந்த பொதுக்குழு இருவரும் கையெழுத்திட்டு, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதத்தை அனுப்பினர். அப்படி அனுப்பப்பட்ட பொதுகுழு நடப்பதற்கு முன்பாக மாவட்ட செயலாளர்கள், தலைமை செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. அப்படிப்பட்ட கருத்துக்களில், ஒற்றை தலைமை வேண்டும் என்ற கருத்தும் உள்ளடங்கி இருக்கிறது. அப்படி மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளில் அதுவும் ஒரு கருத்தாக இருக்கின்ற பட்சத்தில், 23-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் இது குறித்து விவாதித்துக் கொள்ளலாம் என்கிற நிலையில், இதற்கிடையிலேயே அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு, பல்வேறு வகையில் அவர் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினார். நீதிமன்றத்திற்குச் சென்றார்.
ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர், கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவெடுக்க முடியாமல், நீதிமன்றத்திற்கு சென்று, அவர் ஒரு மூன்றாவது மனிதரை போலவும், மற்ற அனைத்து கட்சி நிர்வாகிகளும் எதிரிகளை போல் பாவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதைத் தொடர்ந்து பொதுக்குழுவில் கலவரம் ஏற்படும் என்று, காவல்துறைக்கு அவர் மனு கொடுக்கிறார். அதற்கும் மேல் ஒருபடி சென்று, பொதுக்குழு நடைபெறும் இடத்தின் உரிமையாளரிடம் சென்று, பொதுக்குழுவில் பெரிய அளவில் கலவரம் ஏற்படும்.
எனவே, நீங்கள் இடம் கொடுக்கக்கூடாது என்று சொன்னார். இவையெல்லாம் செய்து முடித்துவிட்ட பின்பு, பொதுக்குழுவிற்கும் வருகிறார். ஏற்கெனவே, தமிழகத்தில் இருக்கிற அனைத்து நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும் ஒரு முடிவான சிந்தனையுடன் அமர்ந்திருக்கிற போது, அவர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ, அந்த தீர்மானம் வராத காரணத்தால், மற்ற எந்த தீர்மானங்களும் இங்கு வாசிக்கக்கூடாது. அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக மொத்த பொதுக்குழு உறுப்பினர்களும் கூறுகிறார்கள்.
அத்துடன் அவர் மேடையில் அமர்ந்திருந்த போதே 11-ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட பின்பு தான் அவர் வெளியிலேயே செல்கிறார். அதன் பின் இவர் நீதிமன்றம் சென்று பொதுக்குழு நடத்துவதை நிறுத்த முயற்சி செய்கிறார். நீதிமன்றம் 11-ம் தேதி காலை 9.15 மணியளவில் பொதுக்குழு நடத்த எந்தவித ஆட்சேபணையும் இல்லை என தீர்ப்பு வழங்குகிறது. ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எங்கு வந்திருக்க வேண்டும். நீதிமன்றம் உங்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி, நீங்கள் பொதுக்குழுவிற்கு செல்ல வேண்டும் என உத்தரவிடுகிறது.
பெரிய உயர்ந்த இடத்திற்கு வந்த பின்பும்: ஆனால் அவர் அங்கு வரவில்லை. அவருக்காக செயற்குழுவிலும், பொதுக்குழுவிலும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வராமல், ஒரு ஒருங்கிணைப்பாளர், இந்த இயக்கத்தில் ஒரு சாதாரண தொண்டனாக இருந்தவர். இந்த இயக்கத்திற்கு எந்த விதமான தியாகமும் செய்யாதவர். ஏதோ ஒரு சூழ்நிலையில் வாய்ப்பு கிடைக்கிறது. சட்டப்பேரவை உறுப்பினராகிறார். சட்டப்பேரவை உறுப்பினர் ஆன உடனே வருவாய் துறை அமைச்சராகிறார். பல்வேறு சூழ்நிலையின் காரணமாக ஜெயலலிதா, முதல்வராக்குகிறார். இரண்டு, மூன்று முறை முதல்வராக்குகிறார்.
இவ்வளவு பெரிய உயர்ந்த இடத்திற்கு வந்த பின்பும், ஜெயலலிதா மறைவிற்கு பின்பும் பல்வேறு சூழ்நிலைகளில் ஒருங்கிணைப்பாளர் என்ற அந்தஸ்தை கொடுத்து, தலைமை பொறுப்பில் அமர வைத்து, ஒவ்வொரு தொண்டனும் அழகு பார்த்த ஓபிஎஸ், 11ம் தேதி பொதுக்குழுவிற்கு வராமல், தலைமை கழகத்திற்கு செல்கிறார்.
அங்கிருந்த மற்றவர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு, ரவுடிகளை அழைத்துச் சென்று, எம்ஜிஆர், ஜெயலலிதா உட்கார்ந்த நாற்காலிகளை உடைக்கிறார்கள். இவர் உண்மையாகவே இக் கட்சியில் விசுவாசமாக இருந்திருந்தால், இந்த கட்சியால் எவ்வளவு பெரிய இடத்திற்கு வருந்திருக்கிறோமே, இப்படி தவறு செய்யலாமா என்ற ஒரு விநாடி நினைத்திருந்தால், உடனே அவர் வெளியே வந்திருப்பார். எல்லாம் உடைத்துவிட்டு, அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றுவிட்டார்கள்.
அடுத்த கட்ட நடவடிக்கை: நீதிமன்றம் 23-ம் தேதிக்கு முன்பாக இருந்து நிலையில் இருக்க வேண்டும் என சொல்லியுள்ளது. வேறுவிதமான எந்தக் கருத்தும் சொல்லவில்லை. ஆனால், அவர் எங்களை அழைக்கிறார். அதனால் தான் சொல்கிறேன். அவர் எங்களை அழைப்பதற்கு தார்மீக உரிமையை இழக்கிறார். இந்த இயக்கத்தில் இருப்பதற்கே, எந்த ஒரு சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நபராக இருக்கிறார். அப்படிப்பட்டவரை விமர்சனம் செய்வதற்கு கூட நாங்கள் வெட்கப்படுகிறோம். கால சூழ்நிலைக்கேற்ப முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கழகத்தின் முன்னனி தலைவர்கள் அமர்ந்து ஆலோசித்து பொதுக்குழு கூட்டுவது குறித்து முடிவு எடுக்கப்படும். இப்போது மேல்முறையீடு செய்திருக்கிறோம். அதில் என்னவிதமான தீர்ப்பு வருகிறதோ, அதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம், அரசியலில் இருப்பதற்கே எந்தவிதமான தார்மீக அடிப்படையும் இல்லை என்று கூற நான் கடமைப்பட்டுள்ளேன். அவர், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை எந்தவித சூழ்நிலையிலும் இந்த கட்சியில் சேர்த்துவிட கூடாது. நான் உயிருள்ள வரை அவர்களை சேர்க்கவிடமாட்டேன். அதே போல் டிடிவி.தினகரன் ஒரு மாயமான், அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்று கூறியவர், 4 வருடங்களுக்கு முன்பாகவே அவர் மனநிலை மாற என்ன காரணம். அனைத்தையும் சுய நலத்திற்காக தான் பயன்படுத்தி உள்ளார்.
அதிமுகவுடன் இணைந்தால் தான் பாஜக வெற்றி: பாஜக கட்சியில் நிறைய தலைவர்கள். அதில் நேற்று மாநில துணைத் தலைவரான வி.பி.துரைசாமி, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான வியூகங்களை வகுக்கிறோம் என கூறியுள்ளார். நேற்று வரை திமுகவில் இருந்தவர். திமுகவோடு சேர்ந்தால் வெற்றி பெறுவோம் என்கிற அர்த்தத்தில் கூறியுள்ளார். அது பழைய பாசம். ஆனால் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, நிச்சயமாக அவர் சொல்லமாட்டார். ஏன் என்று சொன்னால் அவருக்கு அரசியல் நன்றாக தெரியும். காரணம், தமிழகத்தில் அதிமுகவுடன் இணைந்தால் தான் பாஜக வெற்றி பெற முடியும்.
ஓ.பன்னீர்செல்வம், ஒரு இயக்கத்தில் கடுமையாகப் போராடி, பல சோதனைகளை சந்தித்து, பல அவமானங்களை சந்தித்து, அவற்றை வென்றெடுத்து இந்த நிலைக்கு வந்திருந்தால் அவர் தெளிவான முடிவெடுக்க வாய்ப்பிருக்கும். அவர் ஒருவர் பின்னாலே இருந்து வந்தவர். அவர் சொல்வதை கேட்டு கேட்டுச் செயல்பட்டவர். சுய சிந்தனை இல்லாதவர். அந்த சுய சிந்தனை இல்லாதவர் இப்படித் தான் பேசுவார்.
அதிமுகவில் உள்ள ஒரு தலைவர் நாட்டின் பிரதமர் சொன்னார் என்பதற்காக தான் நான் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னால், அவர் எவ்வளவு சந்தர்ப்பவாதியாக இருக்க வேண்டும. அவருக்கு சுயமாக சிந்திக்க தெரிகிறதோ இல்லையோ, சுய நலக்காரராக இருக்கிறார்.
இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.