சென்னை: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் திமுக அரசு மவுனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அமமுக கட்சி நிறுவனர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் திமுக அரசு மவுனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த விசாரணை அறிக்கையில், காவல்துறை அதிகாரிகள் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும், அவர்களை திமுக அரசு காப்பாற்ற முயல்வதாகவும் வெளிவரும் செய்திகள் உண்மையா?
காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிடுவதுடன், அதில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக அரசு இதனை செய்யுமா? அல்லது வழக்கம் போல இப்பிரச்னையிலும் இரட்டை வேடம் போடப் போகிறார்களா?” பதிவிட்டுள்ளார்.