“திமுக-வை ஆதரிக்காதவர்கள் `சங்கி’ என்று சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறதே?”
“சமூக வலைத்தளத்தில் யார் வேண்டுமானாலும் அவர்களது கருத்தைத் தெரிவிக்கலாம். பாஜக, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்கள் கொண்டவர்களுக்கு திமுக என்னதான் நல்லது செய்தாலும் அதைக் குறையுடன் பார்க்கும் பார்வை இருக்கும். இது எல்லா கட்சிக்கும் நடக்கக்கூடிய ஒன்று தான். திமுக-வின் சமூக வலைத்தளங்களில் சங்கி என்று பதிவிட்டால் மட்டுமே அது கட்சி சார்பில் பரப்பப்படும் ஒன்றாகக் கருதப்படும். சில நேரங்களில் பாஜக ஆதரவாளர்கள் எல்லைமீறிய விமர்சனங்கள் தெரிவிப்பார்கள். இதற்கு பாஜக பொறுப்பேற்க முடியாது. அதுபோலத் தான் இதுவும்”.
“திமுக-வுக்கு இப்போதும் திராவிடர் பயிற்சி பாசறை தேவைப்படுகிறதா?”
“நான் திமுக காரன் என்பதால் பொதுவெளியில் மொழி அரசியல், மாநில உரிமைகள், சமூக நீதி கொள்கைகள் பற்றிப் பேச வேண்டும். இதுபோல, கட்சியின் அடிப்படை கொள்கைகளை விளக்குவதற்காக நடத்தப்படுவது தான் திராவிடர் பயிற்சி பாசறைகள். இது ஒரு கட்சியின் அடிப்படை உரிமையாகும். தன் கட்சியில் சேரும் இளைஞர்களுக்குக் கட்சியின் கொள்கைகளைக் கொண்டுபோய் சேர்ப்பது என்பது தலையாய கடமை. அதைத் தான் திமுக இளைஞரணிச் செயலாளர் திராவிடர் பயிற்சி பாசறை மூலம் செய்து கொண்டிருக்கிறார். கொள்கை படிவங்களை விட்டுவிட்டால் அந்த கட்சி வீழ்ந்துவிடும்”.
“`பீஃப்’ விவகாரத்தில் திமுக உணவு அரசியல் செய்கிறது என குற்றம் சாட்டுகிறார்களே?”
“உணவு அரசியல் செய்வது யாரென்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். பாஜக-வின் கொள்கைகளுக்குச் சமரசம் செய்யும் ஒரு கட்சியாக தி.மு.க மாறியிருந்தால் பீஃப் விற்பனைக்குத் தடைகளைக் கொண்டுவந்திருக்கும். ஆனால், அப்படி செய்யவில்லை. திமுகவின் வெற்றிக்கு கிறிஸ்துவ, இஸ்லாமிய சொந்தங்கள் பெரும் வாக்கு வங்கியாக செயல்பட்டுள்ளார்கள். திமுக, பாஜக உடன் சேர்ந்துவிட்டது என்று சிறுபான்மை மக்களிடம் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது. திமுக-வுக்கு கிடைக்கும் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியைத் தடுக்கவே இதுபோன்ற பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் `பீஃப்’ அரசியலை பாஜகவே பரப்புகிறது.”
“திமுக ஆட்சியிலும் மக்கள் தரக்குறைவாக நடத்தப்படுகிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறதே?”
“அதிமுக ஆட்சி போல் இல்லாமல் திமுக அரசு வந்த பின்னர் விரும்பத்தகாத எது நடந்தாலும் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 100 சதவீதம் லஞ்சம், ஊழல் இல்லாத அரசாக மாற்றுவது தான் எங்களின் இலக்கு. சில விரும்பத்தகாத விஷயங்கள் நடக்கிறது. இது வெள்ளை பலகையில் கருப்பு மை போன்றது. இந்த கருப்பு புள்ளிகளை அழிக்கத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த 10 வருடங்களில் நடந்ததையும், இந்த ஒன்றைரை ஆண்டுகாலத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்போது தான் வித்தியாசங்களை உணர முடியும்.”
“பேனாவிற்கு நினைவுச்சின்னம் என்கிறீர்கள். உண்மையாகவே நிதிப் பற்றாக்குறை இருக்கிறதா?”
“முத்தமிழறிஞர் கலைஞரை வெறும் திமுக தலைவராக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள். அவர் பொது வாழ்விற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். 5 முறை முதல்வராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். பன்முக தன்மை கொண்டவர். உபரியை வைத்து ஒரு அரசை சிறப்பாக நடத்தி காண்பித்தவர். அப்படி தான் தமிழக மக்கள் அவரை பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் அவரவர் தலைவர்களை போற்றுவது என்பது ஒரு மரபாகவே இருக்கிறது. மக்கள் யாரும் இதை ஒரு பெரிய பிரச்னையாக பார்க்கவில்லை. கட்சிகள் தான் இதை அரசியலாக்குகிறது. அரசர்கள் மக்களின் வரிப்பணத்தில் பெரிய, பெரிய கோயில்களைக் கட்டினார்கள். அதை ரசித்து கொண்டாடுகிறமே தவிர எதிர்க்கவில்லை. தலைவருக்கு வைக்கும் சிலையால் நிதி மேலாண்மை கவுந்துவிடுமா என்ன?. இதனால், எந்த பிரச்னையும் வராது.”
“அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அரசிடம் வலுவான பதில்கள் இல்லையே?”
“திமுகவுக்குச் சட்டமன்றத்தில் ஒரு பிரதான எதிர்க்கட்சியாக உட்கார்ந்திருப்பது அதிமுக. பாஜக 4 சீட்டுகளுடன் தான் இருக்கிறது. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சி செய்வதால் தங்களை தமிழகத்தில் ஒரு பிரதான எதிர்க்கட்சியாக முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக பாஜக தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எதற்கெடுத்தாலும் ஆமோதித்துப் பேசுவதே அவர்களின் வேலையாக இருக்கிறது. இதற்கு அச்சப்பட வேண்டியதோ, பயப்பட வேண்டியதோ நாங்கள் கிடையாது. அதிமுக தான். அவர்கள் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பாஜகவிற்கு அதிமுக விட்டுக்கொடுத்துவிட்டார்கள். எதிர்மறை அரசியல் செய்ய மறந்துவிட்டார்கள். பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்திற்கு எதிராகப் போராடி வரும் அண்ணாமலை முதலில் அவருடைய கட்சியை எதிர்த்து தானே குரல் கொடுக்க வேண்டும் என மக்கள் கேட்கிறார்கள். தொடர்ந்து குழப்பமான மனநிலையிலேயே அவர் இருக்கிறார்”.
“தி.மு.க சாதிய வன்கொடுமைகளை தடுக்க தவறிவிட்டது என்று குற்றம்சாட்டப்படுகிறதே?”
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த அறிக்கையை சுதந்திர தினத்திற்கு முன்பாக வெளியிட்டார்கள். உடனேயே நமது முதல்வர், உதய சந்திரன், தலைமைச் செயலாளர் இறையன்பு மூலம் எங்கெல்லாம் பிரச்னை நடந்ததோ அங்கெல்லாம் பட்டியலின மக்களைத் தேசிய கொடியை ஏற்றவைத்து நடவடிக்கை எடுத்தார். சாதிய கொடுமைகளை ஒழிப்பதில் திமுக அரசைத் தவிர வேறு எந்த அரசும் முனைப்பு காண்பித்தது இல்லை. சாதிய வன்கொடுமையை உடனே தீர்க்க முடியாது. இதுமிகப்பெரிய அளவில் மாற்றப்படவேண்டிய ஒன்று. சாதி ஒழிப்பிற்கு மக்களிடம் நேரடி பிரசாரத்தையும் அரசு செய்கிறது. உளவியல் ரீதியாக ஒவ்வொருவரிடமும் மாற்றத்தை ஏற்படுத்தி பின்னர், சமூகத்தில் மாற்றம் ஏற்படும் போது தான் சாதிய வன்கொடுமைகளை தீர்க்க முடியும்”.
“ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்துகொண்டது பாஜக உடனான சமரசரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டா?”
“திமுக தலைவர் என்பது வேறு, அனைத்து மக்களுக்கான முதல்வர் என்பது வேறு. நான் காவடி தூக்க டெல்லி செல்லவில்லை என்று திட்டவட்டமாக முதல்வர் கூறியுள்ளார். அண்ணாமலை, ஓ.பி.எஸ் என அனைவருக்கும் முதல்வர் ஒருவரே. திமுக எதிர்க்கட்சியாகச் செயல்பட்ட போது பல மக்கள் நலப் போராட்டங்களை நடத்தியது. ஆனால், ஜனநாயக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஒரு முதல்வராக தற்போது மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
முதல்வர் என்ற நிலையிலேயே தலைவர் மு.க.ஸ்டாலின் மாநில உரிமை, சமூக நீதி காக்கும் பணி செய்து வருகிறார். அதன் அடிப்படையிலேயே தேநீர் விருந்தில் கலந்துகொண்டோம். அதன் அடிப்படையிலேயே டெல்லி செய்கிறார். `முதல்வர் பதவி என்பது வாள் கிடையாது. எண்ணெய் தாங்கிய கரண்டி’ என்று அறிஞர் அண்ணா சொல்லுவார். எண்ணெய் தாங்கிய கரண்டிடன் மாநில உரிமைக்காகவும், மொழி பாதுகாப்புக்காகவும், சமூகநீதிக்காகவும் தனது பணியாக செய்து வருகிறார்”.
“மதுக்கடைகளை மூடாமல் போதை பொருளை மட்டும் ஒழிக்க முடியுமா?”
“நான் இந்த பிரச்னையை ஒரு மருத்துவராகவும் பார்க்கிறேன். போதைப்பொருள் இளைஞர்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை முழுவதுமாக முதல்வர் ஆய்வு செய்து போதை ஒழிப்பு என்பதையே ஒரு பெரிய இயக்கமாக முன்னெடுக்கிறார். பஞ்சாபில் போதை பழக்க வழக்கம் கைமீறி சென்றுகொண்டிருக்கிறது. அதுபோன்று தமிழகமும் ஆகிவிடக்கூடாது என்பதனாலேயே போதை ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. மது ஒழிப்பு நிலையை நோக்கித் தான் நாம் பயணித்து வருகிறோம். ஆனால், மதுவை விடப் போதைப் பொருள் பழக்கம் தான் அதிகரித்து வருகிறது. படிக்கும் மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரிக்கும் போது உடல்நலத்தோடு சமுதாய நலனும் பாதிக்கபடுகிறது. அதனாலேயே முதலில் போதை ஒழிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது”.
“திமுக, அதிமுக, பாஜக பற்றி சொல்லுங்கள்”
“திமுக – திமுகவின் கொள்கை படிவங்கள் தான் தமிழ்நாட்டின் அரசியலாக மாறியது.
அதிமுக – கொள்கை சரியில்லை என்றால் கட்சி எப்படி சிதையும் என்பதற்கு எடுத்துக்காட்டு .
பாஜக – ஜனநாயகத்தில் வெருப்பு அரசியலையே மூலதனமாக வைத்து அரசியல் செய்யும் ஒரு கட்சி.”