வெள்ளாடு, செம்மறி ஆடு போன்ற கால்நடை மேய்ப்பாளர்கள், வளர்த்தப்பின் பொதுவாக சந்தைகளுக்கு சென்று விற்பனை செய்வர். ஆனால் இடைத்தரகர்கள் மிகவும் குறைந்த விலைக்கு பேரம் பேசி, மற்றவர்களுக்கு விற்று விடுவர்.இதனால் பல நாட்களாக கால்நடைகளை மேய்த்து, வளர்த்து வந்த விவசாயிகள் வருவாய் இன்றி பாதிக்கப்படுவர். இதை கருத்தில் கொண்டு கர்நாடக ஆடு மற்றும் செம்மறி ஆடு வாரியம், ‘என்.சி.டி.இ.எக்ஸ்.,’ என்ற புதிய மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளது.ஆம், விவசாயிகள் வளர்த்த கால்நடைகளை இனி மொபைல் ஆப் வாயிலாக, இடைத்தரகர்கள் உதவியின்றி நேரடியாக விற்பனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆப் பயன்படுத்துவது, எப்படி விற்பனை செய்வது என்பது குறித்து, மைசூரு, மாண்டியா, ஹாசன், சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு, துமகூரு, சித்ரதுர்கா, தாவணகரே, கலபுரகி, பெலகாவி ஆகிய மாவட்டங்ககளில், கர்நாடக ஆடு மற்றும் செம்மறி ஆடு வாரியமே விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கிறது.வாடிக்கையாளர்கள் ஆப்பை பயன்படுத்தி, பேரம் பேச வேண்டும். விலை முடிவு ஆன பின், வாடிக்கையாளர், விவசாயி நிர்ணயிக்கும் இடத்தில் ஆடுகள் வழங்கப்படும். ஆப்பிலேயே பணம் செலுத்தலாம். அல்லது நேரிலும் செலுத்தலாம்.இது குறித்து வாரிய உதவி இயக்குனர் பூர்ணானந்தா கூறியதாவது:சந்தைகளில் இடைத்தரகர்களின் தொல்லை அதிகமாக இருக்கும். மாலை வரை காக்க வைத்து, குறைந்த விலைக்கு பேரம் பேசுவர். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். இதனால் தான் கர்நாடக ஆடு மற்றும் செம்மறி ஆடு வாரியமே ‘டிஜிட்டல்’ முறையில் ஆடுகள் விற்பனைக்கு முன் வந்துள்ளது.நாட்டிலேயே இத்திட்டம் கர்நாடகாவில் தான் முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. விற்போருக்கும், வாங்குவோருக்கும் புதிய அனுபவத்தை தரும். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டியுள்ளார்.இது குறித்து மாநிலம் முழுதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். விவசாயிகளுக்கு லாபம் ஏற்படுத்தி தருவதே வாரியத்தின் நோக்கமாகும். அனைவரும் பயன்படுத்திகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.நவீன உலகத்தில், ‘டிஜிட்டல்’ முறையில் ஆடுகள் வாங்கவும் சாத்தியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘ஆன்ட்ராயிட்’ வசதியுள்ள மொபைல் போன் பயன்படுத்துவோர், ஆப் பயன்படுத்தலாம்.
-நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement