ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் எந்த பக்கம் செல்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக
தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். இன்று அது தொடர்பான விசாரணை நடைபெற உள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பெரியளவில் ஆதரவு கிடைக்கவில்லை. நீதிமன்ற உத்தரவு ஓபிஎஸ் தரப்புக்கு புதிய தெம்பூட்டியதோடு, எடப்பாடி பக்கம் சென்ற நிர்வாகிகளும் மீண்டும் ஓபிஎஸ்ஸை நோக்கி திரும்பி வர முடிவு செய்துவருகின்றனர். இன்னும் சிலரோ இறுதி தீர்ப்பு வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம், அதுவரை இருக்குமிடம் தெரியாமல் இருந்துவிடலாம் என்று நினைக்கிறார்களாம்.
ஓபிஎஸ் வகித்த எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியை அவரது சமூகத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமாருக்கு அளித்து ஓபிஎஸ் மட்டுமே எதிர்ப்பு, அவரது சமூகத்துக்கு அல்ல என்று சொல்லாமல் சொன்னார். தென் மண்டலத்தில் அதிமுகவின் முகமாக தன்னை அறிவித்துவிட்டாரே என்று எடப்பாடி பழனிசாமிக்கு அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளராக செயல்பட்டார் ஆர்.பி.உதயகுமார்.
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களை எவ்வாறெல்லாம் தான் விமர்சிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை ஆர்.பி.உதயகுமார் மூலம் பேசுகிறார் என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்களே கமெண்ட் அடித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாகவே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேனியில் போட்டியிட்டு பார்க்கும் படி சவால் விட்டார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவிக்கே ஆபத்து என்ற நிலை வந்தபோது அமைதியாகிவிட்டாராம் ஆர்.பி.
இறுதித் தீர்ப்பு வந்த பின்னர் இறங்கி அடிக்கலாம், அதுவரை கேட்கும் கேள்விக்கு சுற்றி வளைத்து பதில் சொல்லி தப்பிவிடலாம் என்று கணக்கு போட்டுள்ளதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.