சென்னை: லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து, நாயகனாக அறிமுகமான படம் ‘தி லெஜண்ட்’. இந்த படம் ஜுலை 28 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப் பிரமாண்டமாக உருவான இந்த படம் தியேட்டர்களில் வெளியானது.
பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். யாஷிகா, விவேக், ராய் லட்சுமி, சுமன், பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் பிரம்மாண்டமாக வெளியானது.
முதல் பட ஹீரோவிற்கு இத்தனை பெரிய ஓப்பனிங் என்பது இதுவரை தமிழ் சினிமா காணாதது. இந்நிலையில், இப்படம் நேற்று (ஆக.21) 25ஆவது நாளை கடந்துள்ளது. பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் படம் இப்போது வரை தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பது சாதனையான விஷயமாக திரையுலக வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
45 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் இதுவரை 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. ரிலீசான முதல் நாளிலேயே 6 கோடியை உலகம் முழுவதும் வசூல் செய்து அனைவரும் ஆச்சரியத்தை கொடுத்தது தி லெஜண்ட் படம்.இருந்தாலும் தி லெஜண்ட் படத்திற்கு கிடைத்த விமர்சனத்தை ஈடுசெய்ய அடுத்ததாக மற்றொரு படத்தில் நடிக்க அண்ணாச்சி முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக பல டைரக்டர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் தி லெஜண்ட் 25 நாட்களை கடந்துள்ளதை ட்விட்டரில் புதிய போஸ்டர் மூலம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் லெஜண்ட் அண்ணாச்சி. மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் படத்திலேயே திரையுலகில் அழுத்தமான இடத்தை பிடித்ததுடன், தி லெஜண்ட் படம் 25 நாட்களை கடந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதற்கு அண்ணாச்சி பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. அடுத்த படத்தின் அப்டேட்டிற்காக காத்திருப்பதாக நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.