அரசாங்கத்தைவிட கட்சியே பெரியது என்று உ.பி. துணை முதல்வர் கேசவ் மவுரியா ட்வீட் செய்துள்ளது பல்வேறு வாதவிவாதங்களை எழுப்பியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவராக மாநில கேபினட் அமைச்சர் ஸ்வதந்திர தேவ் சிங் பொறுப்புவகித்து வந்தார். இவர் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கட்சிக்கு புதிய மாநிலத் தலைமையை நியமிக்கும் பணியில் கட்சி மேலிடம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் உ.பி. துணை முதல்வர் கேசவ் மவுரியா ஒற்றை வரியில் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், அரசாங்கத்தைவிட கட்சி பெரியது என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மவுரியாவிடமே கருத்து கேட்க ஊடகங்கள் முயற்சி மேற்கொள்ள அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கட்சி நிர்வாகி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திறகு அளித்த பேட்டியில், கேசவ் பிரசாத் மவுரியா இதை எல்லா இடங்களிலும் சொல்லியுள்ளார். பொது நிகழ்ச்சிகளிலும் கூட இதனைத் தெரிவித்துள்ளார். கட்சி உறுப்பினர்கள் தங்களை துணை முதல்வருக்கு நிகராகக் கருத வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். இன்று அதையே அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் என்றார்.
கேசவ் மவுரியா உத்தரப் பிரதேசத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில் செல்வாக்கு மிகுந்த தலைவராகத் திகழ்கிறார். 2017 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட போது கேசவ் மவுரியா தான் மாநில பாஜக தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கேசவ் பிரசாத் மவுரியாவின் ஒற்றை வரி ட்வீட்டால் அவர் மீண்டும் பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு தேர்வாகலாம் என்று கூறப்படுகிறது.