கோவை: மேட்டுப்பாளையத்தில் 40 மாடுகள் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசி இருக்கிறார்கள். ஆசிட் வீச்சால் மாடுகளின் தோள்கள் சுருங்கி, தோல் கருகி காயம் ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் கல்லார் என்ற இடத்தில் உள்ள ரயில்வே கேட் அருகில் ராஜ்குமார் என்பவர் 40 எருமை மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ராஜ்குமார் தனது இடத்தில் கட்டி வைத்து பராமரித்து வந்த 40 மாடுகளையும் பார்த்தபோது அதனுடைய தோல்கள் சுருங்கிய நிலையிலும், சில இடங்களில் தோல்கள் உரிந்தும் காணப்பட்டது. இதனால், கால்நடைகளை பராமரிக்கும், கால்நடை மருத்துவரை வரவழைத்து பரிசோதித்துள்ளார். இந்த சோதனையில் மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்டதால் தான் காயங்கள் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு இந்த கால்நடைகளை மேய்ச்சலுக்காக அனுப்பிய போது மர்ம நபர்கள் இந்த கால்நடைகள் மீது ஆசிட் வீசியதால் மாடுகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது எனவும், இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ராஜ்குமார் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக தகவலறிந்து காரமடையிலிருந்து கால்நடை மருத்துவர்கள் காயமடைந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருக்கின்றனர். இதில் ஒரு சில கால்நடைக்கு காயங்கள் பெரியளவில் உள்ளது, ஒரு சில கால்நடைகளுக்கு தோள் உரிந்து காணப்படுகிறது. இதுகுறித்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், கால்நடைகள் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள் மீது காவல்துறை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ராஜ்குமார் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.