2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை பேசுபொருளானது. தொலைநோக்கு திட்டங்கள், கவர்ச்சிகர அறிவிப்புகள் கலந்த கலைவையாக அந்த அறிக்கை அமைந்திருந்தது. தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளதாக
அரசு தற்போது கூறிவரும் நிலையில் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என எதிர்கட்சிகள் கூறிவருகின்றன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பட்டிருந்தது. திமுகவை பார்த்து அதிமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தது.
தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்து 14 மாதங்களாகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. நிதி நிலைமை சீரான பின்னர் நடைமுறைபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
எப்போது நிதி நிலைமை சீராகும், எப்போது தமிழக அரசு அறிவிக்கும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில் புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுளது.
இன்று புதுச்சேரி மாநில பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அப்போது, அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத 21 வயது முதல் 57 வயதுக்குட்பட்ட. அனைத்து குடும்ப தலைவிக்கு தலா 1000 ரூபாய் மாதம்தோறும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
பட்ஜெட் உரையில் முதல்வர் அறிவித்துள்ளதால் விரைவில் புதுச்சேரியில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.
புதுச்சேரியில் இந்த திட்டம் அமலுக்கு வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய நிதி சரியாக வருவதில்லை உள்ளிட்ட சில காரணங்களை தமிழக அரசு கூறி வந்தாலும் இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்தினால் மட்டுமே 2024 மக்களவைத் தேர்தல் சமயத்தில் மக்களை துணிச்சலுடன் சந்திக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
எனவே விரைவில் தமிழகத்திலும் நல்ல சேதி வரும் என்று திமுக வட்டாரத்தில் கூறிவருகின்றனர்.