புதுடெல்லி: ஆம் ஆத்மியைத் துறந்துவிட்டு பாஜகவில் இணைந்தால் தன் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று பாஜக தனக்கு தூது அனுப்பியுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார். இருப்பினும் தான் ஒரு ரஜபுத்திரர் என்பதால் உயிரே போனாலும் சதிகாரர்களுக்கு அடிபணிய மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவு செய்த ட்வீட்டில், “எனக்கு பாஜகவிடம் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது. ஆம் ஆத்மி உறவை முறிக்கவும். பாஜகவின் இணையவும். அப்படிச் செய்தால் சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகள் முடித்துவைக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு என்னுடைய பதில் என்னவென்றால், நான் மஹாராணா பிரதாப்பின் சந்ததி. நான் ஒரு ரஜபுத்திரன். என் தலையை துண்டித்தாலும் கூட அஞ்சமாட்டேன். ஆனால் அதற்காக நான் சதிகாரர்கள் முன் தலைகுனிய மாட்டேன். ஊழல்வாதிகளுக்கு அடிபணிய மாட்டேன். என் மீதான வழக்குகள் அனைத்தும் போலியானவை. நீங்கள் என்ன செய்யவேண்டுமோ செய்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
मेरे पास भाजपा का संदेश आया है- “आप” तोड़कर भाजपा में आ जाओ, सारे CBI ED के केस बंद करवा देंगे
मेरा भाजपा को जवाब- मैं महाराणा प्रताप का वंशज हूँ, राजपूत हूँ। सर कटा लूँगा लेकिन भ्रष्टाचारियो-षड्यंत्रकारियोंके सामने झुकूँगा नहीं। मेरे ख़िलाफ़ सारे केस झूठे हैं।जो करना है कर लो
— Manish Sisodia (@msisodia) August 22, 2022
ரெய்டு, வழக்கு பின்னணி: டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தலைமைச் செயலர் நரேஷ் குமார், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் கடந்த ஜூலை மாதம் அறிக்கை அளித்தார். அதன்பேரில், மதுக்கடை உரிமம் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, துணை முதல்வரின் கணினி, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சிசோடியா மற்றும் 3 அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மணிஷ் சிசோடியா முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பிரிவுகள், பணப் பரிமாற்ற மோசடி தொடர்பானவை. இது தொடர்பாக மணிஷ் சிசோடியாவிடம் விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.