அமெரிக்காவில் உள்ள அர்கான்சாஸ் மாகாணம் க்ராவ்ஃபோர்டு கவுண்டியில் புகாரின் பேரில் போலீசார் விசாரித்து விட்டு, குறிப்பிட்ட நபரை மூன்று போலீசார் கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது அவரை கீழே தள்ளி கைகளை பின்னால் மடக்கி பிடித்து கொண்டு கால்களாலும், கைகளாலும் சரமாரியாக போலீசார் தாக்குதல் நடத்துகின்றனர். குறிப்பாக அந்த நபரின் தலை மற்றும் கால்களின் மீது பலமுறை குத்துகின்றனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் இவ்வளவு மூர்க்கத்தனமாக நடந்து கொண்டது ஏன்? என்ற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள க்ராவ்ஃபோர்டு கவுண்ட் ஷெரிப் ஜிம்மி டாமண்டே, சம்பந்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இருந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் க்ராவ்ஃபோர்டு கவுண்டி ஷெரிப் அலுவலகத்தில் துணை அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர்.
மூன்றாவது நபர் முல்பெரி போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் பணிபுரிகிறார். தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தவுடன் மூன்று போலீசாரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனது அலுவலக அதிகாரிகள் யாராக இருந்தாலும் சரி. அவர்கள் செய்யும் அத்துமீறல்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
நடந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்கள் விசாரிக்கையில், முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, சம்பந்தப்பட்ட நபரின் பெயர் ராண்டல் ஒர்செஸ்டர். இவர் பலசரக்கு கடை ஒன்றில் ஊழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தலையை வெட்டி விடுவேன் என்று மிரட்டியிருக்கிறாராம். இதுதொடர்பான புகாரை அடுத்து போலீசார் விசாரித்துள்ளனர்.
அப்போது தான் ராண்டல் ஒர்செஸ்டர் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. மேலும் போலீசார் தரப்பு கூறுகையில், முதலில் அமைதியான முறையில் தான் விசாரித்துள்ளனர். அப்போது போலீஸ் அதிகாரி ஒருவரை ராண்டல் ஒர்செஸ்டர் தாக்கத் தொடங்கியுள்ளார். எனவே அவரை தடுக்கவும், மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்கவும் போலீசார் முயற்சித்தனர். இதன் விளைவாகவே நிலைமை கைமீறிப் போனதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தாக்குதலுக்கு ஆளான ஒர்செஸ்டர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு வான் புரேனில் உள்ள க்ராவ்ஃபோர்டு கவுண்டி சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஜார்ஜ் ப்ளாய்டு என்ற கருப்பின நபரை வெள்ளை இன போலீஸ்காரர் ஒருவர் தனது கால்களால் அவரது கழுத்தை நெறித்து கொலை செய்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உலக நாடுகள் பலவும் கடும் கண்டனத்தை பதிவு செய்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.