வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து டில்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் நடந்தது.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் டில்லி எல்லையில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவித்ததால், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
எனினும், வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்தும், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து டில்லி ஜந்தர் மந்தரில் இன்று முதல் போராட்டம் நடத்தப்படும் என 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக் கிசான் மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனையடுத்து உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டில்லி நோக்கி படையெடுத்தனர். போராட்டம் அறிவிப்பை அடுத்து, டில்லி – ஹரியானா எல்லையான திக்ரி, டில்லி – மீரட் சாலை, சிங்கு எல்லை, காசிப்பூர் ஆகிய இடங்களில் டில்லி போலீசார் சிமென்ட் தடுப்புகளை ஏற்படுத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், காசிப்பூரில் பாரதிய கிஷான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத்தை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தடுப்புகளை மீறி டில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர். போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் நடத்துவதால் பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement