குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே இறந்த கோயில் காளைக்கு கும்மி, தேவராட்டம் ஆடி 72 கிராம மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். குஜிலியம்பாறை ஒன்றியத்தில் ஒரு சமூகத்தினர் சலகருது என்ற கோயில் காளைகளை வளர்த்து வருகின்றனர். இவர்களது குலதெய்வம் வழிபாட்டின் போது நடைபெறும் திருவிழா நாட்களில் கோயில் காளைக்கு முக்கியத்துவம் தரப்படும்.
மேலும் திருவிழா இறுதி நிகழ்ச்சியாக நடக்கும் சலகருது ஓட்ட பந்தயங்களில் கோயில் காளை பங்கேற்கும். திருவிழாக்களில் மட்டுமே பங்கேற்பதால் இவை சாமி மாடுகள் என்றழைக்கப்படுகிறது. இந்த கோயில் காளைகள் கோப்பாநாயக்கர் மந்தைக்கு உட்பட்ட காட்டமநாயக்கன்பட்டி, விராலிபட்டி, சித்திலப்பள்ளி, பாப்பாநாயக்கனூர், கூட்டக்காரன்பட்டி, மஞ்சாநாயக்கனூர் உள்ளிட்ட 72 கிராமங்களில் வளர்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குஜிலியம்பாறை அடுத்துள்ள காட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கவேல் என்பவர் வளர்த்து வந்த கரூர் மாவட்டம், வெஞ்சாங்கூடலூர் பெத்தாங்கோட்டை தம்பிரான் கோயிலின் 23 வயதுள்ள காளை மாடு இறந்தது. இறந்த கோயில் காளையின் உடல் ஊர் மந்தையில் வைக்கப்பட்டு 72 கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதற்காக ஊர்மந்தையில் பந்தல் அமைக்கப்பட்டு கும்மி, தேவராட்டம், வாணவேடிக்கை என நடத்தி இறுதி சடங்கு செய்தனர். பின்னர் இறந்த கோயில் காளை மாட்டின் உடலை சலகருது மாடுகளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் புதைத்தனர்.