Ramanathapuram District News: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில், ஆபாச நடனம் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆபாச நடனம் ஆடக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவும் போலீசார் முன்னிலையிலேயே நடைபெற்ற ஆபாச நடன நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதுகுளத்தூர் அருகே உள்ளது வாகைக்குளம் கிராமம். இங்குள்ள கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த சிலநாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது இதில் தேர் ஊர்வலம், உரியடி நிகழ்ச்சி நடந்தது. இத்திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் கலைநிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டு போலீசாரின் அனுமதியுடன் ஆடல்பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று இரவு நடந்த ஆடல்பாடல் நிகழ்ச்சியில் ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம் ஆடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆடல்பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடக்கூடாது என்றும், மீறி ஆபாச நடனம் ஆடினால் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், ஆபாச நடனம் நடைபெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் முன்னிலையில் கடைசிவரை நடனநிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் காவல்துறையினர் அதை தடுத்து நிறுத்தாமல் மௌனமாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.