ரா.அர்ஜுனமூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைந்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. பல்வேறு தொழில்களை நடத்தி வரும் பிரபல தொழிலதிபராக விளங்குகிறார் ரா.அர்ஜுனமூர்த்தி. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். இதன் விளைவாக தமிழக பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு மாநில வர்த்தகப் பிரிவு தலைவர் பதவி அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அறிவு சார் பிரிவின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ரா.அர்ஜுனமூர்த்தி மனைவியின் பள்ளி தோழி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பாஜக முன்னெடுத்த வேல் யாத்திரையில் ரா.அர்ஜுனமூர்த்தியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதுதொடர்பான விரிவான திட்டத்தை அப்போதைய மாநிலத் தலைவர் எல்.முருகனிடம் அளித்ததாக சொல்லப்பட்டது. இந்த சூழலில் நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்தது. இதையொட்டி ரஜினியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்திருந்தார்.
இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடக்க கடைசி நேரத்தில் தான் ரஜினியுடன் இணைந்து செயல்படவிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ரஜினி, தனது அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ரா.அர்ஜுனமூர்த்தியை நியமித்தார். ஆனால் உடல்நலத்தை காரணம் காட்டி அரசியலில் இருந்து ரஜினி திடீரென விலகியது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அப்போதும் தனது இரு கண்களில் ஒன்று மோடி, மற்றொன்று ரஜினி. அவரை விட்டு விட்டு எப்படி செல்வேன். ரஜினியுடன் தொடர்ந்து இருப்பேன் என்று தெரிவித்தார்.
ஆனால் காலப்போக்கில் முடிவுகள் மாறத் தொடங்கின. தனிக்கட்சி தொடங்கும் முடிவை எடுத்தார். இதுதொடர்பான வேலைகளில் தீவிரம் காட்டி ”இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். 2021 சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதற்காக தனது கட்சிக்கு ரோபோ சின்னம் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். எல்லாம் சுமூகமாய் போய் கொண்டிருந்த சூழலில் திடீரென சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. பின்னர் தொழில் ரீதியான விஷயங்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். அரசியல் களத்தில் பெரிதாக தலை காட்டாமல் இருந்து வந்தார். இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் ரா.அர்ஜுனமூர்த்தி பாஜகவில் இன்று மீண்டும் இணைந்திருக்கிறார்.
6 புதிய மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரி – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!
கடந்த 18ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ரா.அர்ஜுனமூர்த்தி, அவரது மனைவி மற்றும் மகள் சுவஸ்திதா ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். இதுதொடர்பான புகைப்படத்தை சுவஸ்திதா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்போது மீண்டும் பாஜகவில் இணைவது பற்றி பேசியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.