ராஞ்சி: ஜார்க்கண்டில் அரசியல் நெருக்கடி முற்றுவதால் மனைவியை முதல்வராக்க அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுரங்க ஒதுக்கீட்டை முதல்வர் பெற்றிருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக அந்த கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதனை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதனிடையே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில் இன்றோ, வெகுவிரைவிலோ தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து விவாதிக்க ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 81 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 30, காங்கிரஸுக்கு 18, ராஷ்டிரிய ஜனா தளம், சி.பி.ஐ.எம்.எல். கட்சிகளுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ. உள்ளனர்.
பாஜகவுக்கு 26, அதன் கூட்டணிகட்சிகளுக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆளும் கூட்டணியில் இருந்து 16 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு அணி மாற தயாராக இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் கூறி வருகின்றன.
இப்போதைய சூழ்நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு 2 சவால்கள் உள்ளன. முதல் சவால் தேர்தல் ஆணையத்தின் முடிவு ஆகும். இரண்டாவது சவால் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் அணி மாறாமல் தடுப்பது ஆகும்.
தேர்தல் ஆணையம் எதிர்மறையாக முடிவு எடுத்தால் மனைவி கல்பனாவை (46) முதல்வராக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் ராஞ்சியை விட்டு வெளியேறக்கூடாது என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.